திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் முதல்படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திகழ்கிறது. மதுரையிலிருந்து தெற்கே திருமங்கலம் செல்லும் சாலையில், 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம் மலை. சுமார் 300 மீட்டர் உயரமுள்ள இம் மலையில் அடிவாரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலம் பாண்டிய நாட்டு 14 சைவத் திருத்தலங்களுள் முக்கியமானதாக விளங்குகிறது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. பெயர்க்காரணம்
பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று. இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார். இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி, சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.தல வரலாறு
கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவி க்கு ஒம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன்-தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது. இங்குள்ள இறைவனின் பெயர் பரங்கிரிநாதர், இறைவி-ஆவுடைநாயகி. கோயிலின் தலவிருச்சகமாக கல்லத்தி மரம் லெட்சுமி தீர்த்தம் செல்லும் வழியில் உள்ளது. கோயில் அமைப்பு
இது குடைவரைக் கோயிலாகும். 6 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வடக்குத் திசை நோக்கி கோயில் அமைந்துள்ளது. இதன் பெரும்பகுதி மலையின் வடபாதியில் உள்ளது.திருப்பரங்குன்றம் ஊருக்குள் சென்றதும் சன்னதி தெருவில் மயில் மண்டபம் உள்ளது. அடுத்து 16 கால் மண்டபம் உள்ளது. கோயில் முகப்பில் ஆஸ்தான மண்டபம் எனும் பெரியமண்டபம் 48 தூண்களுடன் உள்ளது. இங்கு கருப்பண்ண சுவாமி கோயில் மற்றும் பத்ரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு மற்றும் முருகப் பெருமான் தெய்வானை திருமணக்கோலம், மஹாவிஷ்ணு, மகாலெட்சுமி ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன. பெரிய மண்டபத்தை அடுத்து கோபுரவாயில் உள்ளது. இதில் 150 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுரம் நடுவே கீழ்த்திசை நோக்கி கோபுரவிநாயகர் முன்னிருந்து அருள்பாலிக்கிறார். கருவறை
3 வாயில்களுடன் அர்த்தமண்டபம் உள்ளது. இதில், பரங்கிரிநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை (கொற்றவை) மற்றும் முருகப் பெருமான் வடக்கு நோக்கியும், பவளக் கனிவாய்ப் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். முருகப்பெருமான் கருவறைக்குள் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். கருவறைக்கு மேற்கில் இடப்பக்கம் தெய்வானையும், வடப்பக்கம் நாரதரும் இடம் பெற்றுள்ளனர்.தீர்த்தம்
கோயிலின் கிழக்கே 1 கி.மீ. தூரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. மலை அடிவாரத்தில் சத்திய தீர்த்தம் உள்ளது. இதில் தைமாத தெப்பத்திருவிழா நடைபெறும்.பூஜைகள்
கோயில் நித்திய பூஜைகள் காமிக ஆகமப்படியும், திருவிழாக்கள் காரண ஆகமப்படியும், கந்த சஷ்டி திருவிழா குமார தந்திரப்படியும், மூலஸ்தான பெருமானுக்கு ஆஜிதாகமப்படியும் பூஜைகள் நிகழ்கின்றன. எட்டுக்கால பூஜைகள் தினமும் நடைபெறுகின்றன. காலையில் கோபூஜை- 5.15, திருவனந்தல்-5.30, விழா பூஜை-7.30, காலசந்தி-8, திருக்காலசந்தி-10.30, உச்சிகாலம் (பகல்)-12.30, மாலையில் சாயரட்சை -5.30, அர்த்தசாமம்-9.15, பள்ளியறை-9.30. மலை மீதுள்ள அருள்மிகு காசிவிசுவநாத சுவாமிக்கு காலை 9 மணிக்கு நித்ய பூஜை நடைபெறும். கால பூஜைக்கு தினமும் சரவணப் பொய்கையிலிருந்து தீர்த்தம் எடுத்து யானை மீது அமர்த்தி பலபீடத்துக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.திருவிழாக்கள்
சித்திரை- முருகப்பெருமானுக்கு தங்கக் கவசம் சாற்றுதல், மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருக்கல்யாண விழாவுக்குப் புறப்படுதல். வைகாசி- வசந்தவிழா (விசாகம்), பாலாபிஷேகம், கந்தசஷ்டி மற்றும் ஆடிப்பூரம், ஆடிக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஐப்பசி பூரம், கந்தசஷ்டி, கார்த்திகை சோமவரங்கள், திருக்கார்த்திகை, திருப்பள்ளி எழுச்சி (மார்கழி), ஆரூத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, தெப்பத் திருவிழா, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனிப் பெருவிழா, ஆனி ஊஞ்சல், மொட்டையரசுத் திருவிழா, ஆனி முப்பழத் திருவிழா.கோயிலைச் சுற்றி தென்பரங்குன்றம் மற்றும் சமணர் குகைகள் உள்ளன. மயில்களின் காப்பகமும் செயல்பட்டுவருகிறது. கோயில் பகுதியில் பசுமடம் உள்ளிட்டவையும், வேதபாடசாலையும் செயல்படுகின்றன. கோயிலில் வெண்ணெய் சிறு சிறு உருண்டைகளாகத் திரட்டி விற்கப்படும். அவ்வெண்ணெய் உருண்டைகளை வாங்கி கோயிலிலுள்ள மிகப் பெரிய நந்தி சிலை மீது மனதில் வேண்டுதல்களோடு எறிய வேண்டும். வெண்ணெய் உருண்டை நந்தியின் மேல் ஒட்டிக் கொண்டால், நினைத்தது நடக்கும் என்று வழிவழியாய் நம்பப்பட்டு வருகிறது. போக்குவரத்து வசதிகள்
கோயிலுக்கு மதுரையிலிருந்து செல்லலாம். திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் இருந்தாலும் குறிப்பிட்ட ரயில்களே நிற்கும். மதுரை மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றிலுந்து பேருந்து வசதிகள் உள்ளன.கோயில் பூஜைகள், தங்கத் தேர் இழுத்தல் மற்றும் அன்னதானத் திட்டத்தில் சேருவோர் அலுவலகத் தொலைபேசி எண்: (0452) 2482248, விடுதி தொலைபேசி: (0452) 3952198 மற்றும் கோயில் துணை ஆணையர் மற்றும் நிர்வாக அலுவலர் தொலைபேசி: (0452) 2484359 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். |