வயலூர் முருகன் கோயில்

vayalur

     முருகப் பெருமானுக்குப் பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்பார் அருணகிரிநாதர். ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சி வயலூர். வயலூர் முருகன் கோயில், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் குமார வயலூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் இந்தக் கோயிலைக் கட்டியதாகக் கருதப்படுகிறது.

     கருவறையின் முதன்மை தெய்வம் சிவன் என்றாலும், இக்கோயில் முருகன் கோயிலாக புகழ்பெற்றுள்ளது. இக்கோயில் கௌமார வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும், முருகப் பெருமானின் அடியாரான அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் விளங்குகிறது.

     அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு 18 பாடல்களைப் பாடியுள்ளார். இங்கிருந்தே திருப்புகழ் எனும் பெரும் பொக்கிஷம் உருவானது என்பதும் இவ்வாலய பெருமைகளில் ஒன்று.

     இவ்வூரை 'உறையூர் கூற்றத்து வயலூர்', 'தென்கரை பிரமதேய நந்திவர்ம மங்கலம்' 'ராஜகம்பீர வளநாடு' 'மேலைவயலூர்' என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

வரலாறு
     இக்கோயிலை முற்கால சோழ மன்னனான ஆதித்த சோழனால், சோழர் கலைப் பாணியில் பரிவார தெய்வங்களுக்கான தனி சந்நிதிகளோடு கற்றளியான ஒரு சிவன் கோயிலாக கட்டப்பட்டது. இக்கோயில் இறைவன் வயலூர் திருகற்றளி பரமேசுவரர் என அழைக்கப்பட்டார். இந்த ஊருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த சேந்தன்காரி என்ற பெண் இந்தக் கோயிலின் இறைவனுக்கு ஒரு இறைவியாக உமா தேவியின் செப்புச் படிமத்தை செய்து அளித்தாள். அந்த உமையை தன் மகளாக பாவித்து இறைவனுக்கு மணம் செய்துவித்தாள். இறைவிக்கு திருவமுது படைக்க தன் பிறந்தகத்தில் சீதனமாக வந்த வயலை தானமாக அளித்தாள்.

கோயில்
     பசுமையான வயல்களால் சூழப்பட்டுள்ள இக்கோயில் உய்யகொண்டான் ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் கிழக்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. கோயில் இரு திருச்சுற்றுகளைக் கொண்டுள்ளது. மூலவரான சிவன் சந்நிதிக்கு பின்புறம் உள்ள முருகப் பெருமான், கோயிலின் முக்கிய தெய்வமாக கருதப்படுகிறார். இக்கோயிலில் உள்ள மற்ற சந்நிதிகள் மூலவர் ஆதிநாதர் (சிவன்). இத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தம் சக்தி தீர்த்த குளம் என்றும் அழைக்கப்படுகிறது. தொன்மத்தின் படி, முருகப்பெருமான் தனது வேலாயுதத்தால் இந்த குளத்தை உருவாக்கினார் எனப்படுகிறது. இராசகோபுரத்தின் நுழைவாயிலில் இருந்து இடது புறத்தில் தல மரமான வன்னி மரம் காணப்படுகிறது. இக்கோயிலில் ஐந்து நிலை இராசகோபுரம் கட்டப்பட்டுள்ளது.

தல வரலாறு
     முருகப்பெருமானின் பெருமை சொல்லும் ஆலயமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு. காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒரு சோழ அரசன் (பெயர் அறியவில்லை) தனது தாகம் தணிக்க கண்ணில் பட்ட கரும்பொன்றை உடைத்து அதன் சாற்றினை அருந்த முற்படுகையில் அது மூன்று கிளைகளாக முறிந்து நின்ற அற்புதம் கண்டு வியப்புற்றான். மேலும் முறிந்த கரும்பிலிருந்து குருதியும் உதிரவே, அக்கரும்பு பயிரான வயலைத் தோண்டிப் பார்க்கையில், சிவலிங்கம் இருக்கக் கண்டான். கரும்பினைக் கண்ணுற்ற இடத்திலேயே அச்சிவலிங்கத்தை ஆகம விதிகளின்படி நிறுவி கோயில் ஒன்று எழுப்பினான். மூலவரான சிவன் ஆதிநாதர் எனவும், மூலவி ஆதி நாதி எனவும் வழங்கலாயினர். வயலிடை கண்ணுற்ற மூலவர் என்பதனால், வயலூர் என அவ்விடம் வழங்கப் பெறலாயிற்று.

     9-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டது. ராஜகேசரிவர்மன், குலோத்துங்கச் சோழன், பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் திருப்பணிகள் கண்ட இந்த கோயிலின் கல்வெட்டுகள் ஆலயத்தின் பழைமையை எடுத்துக் கூறுகின்றன.

vayalur

     இங்குள்ள ஆதிநாதர் தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் மறப்பிலி நாதர் என்றும் அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரன் என்றும், விடங்கப் பெருமான், திருமகாதேவன், திருக்கற்றளிப் பெருமான் என பல நாமங்களால் வணங்கப்படுகிறார். இங்கு வடமுகம் நோக்கி அமர்ந்திருக்கும் அம்பிகையின் திருநாமம் ஆதிநாயகி.

     பொய்யான வாழ்வின் மாயைகளை அகற்றித் தம்மை நாடி வருபவருக்கு மெய்ஞானம் அருளும் காரணத்தால் இங்கு வீற்றிருக்கும் கணபதியைப் பொய்யாக் கணபதி எனத் துதிக்கின்றனர். இவரது கையில் உள்ள விளாங்கனி, பழத்தின் ஓடு போன்ற மனித உடல்சார்ந்த மாயைகளை நீக்குவதன் உருவகம் எனப் பொருள் கூறுவர். ‘கைத்தல நிறைகனி’ எனத் துவங்கும் பாடலை, இங்குள்ள பொய்யாக் கணபதியைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியதாகக் கூறுவர்.

     வயலூரை முத்தித் தலம் எனப் போற்றுவர். இங்கு தாண்டவக் கோலத்தில் இருப்பினும், உற்சவரின் காலடியில் முயலகன் உருவகம் கிடையாது. தில்லை அம்பல நடராசனைப் போலன்றி, ஆடிய பாதனார் இத்தலத்தில் அமைதியான தோற்றம் கொண்டு காணப்படுகிறார்.

     தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் முருகப்பெருமான் இணைந்து ஈசனை இங்கு பூஜிக்கிறார்கள் என்பது ஐதீகம். தனி சந்நிதியில் வள்ளி - தெய்வானை சமேதராக காட்சி தருகிறார் வயலூர் முருகப்பெருமான்.

     திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. ஆண்டு முழுக்க பக்தர்கள் இங்கு வந்து கூடி முடி இறக்குதல், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், காது குத்தல், சஷ்டி விரதம் இருத்தல், ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தல், பெண்கள் கும்பிடு தண்டமும், அடிப் பிரதட்சணமும் செய்வது என பல நேர்த்திக்கடன்கள் செய்கின்றனர். நாக தோஷம் மற்றும் குழந்தை வரம் இல்லாதோர் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி, வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, நற்பலன்கள் அடைவர் என்பது நம்பிக்கை.

     பங்குனி உத்திரத்தன்று தெருக்களில் நடக்க இயலாத கூட்டத்தோடு வயலூர் முருகனை தரிசிக்க ஆயிரக் கணக்கான பக்தர்கள் நடந்து செல்வர். வழியெங்கும் அன்னதானம் நீர்மோர் என மக்கள் பக்தர்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்வர். வயலூர் என்ற பெயருக்கு ஏற்ப அந்த நாட்களில் நடக்கும் பாதையெங்கும் நெல்மணி வாசனையும் வாழைக் கொல்லைகளின் இலை வாசனையும் துணை வரும்.

vayalur

பூஜை விவரம்
     கோவில் நாள்தோறும் ஆறுகால பூசை செய்யப்படுகிறது. காலை 6:00 மணிக்கு காலசாந்தி பூசையும், 8:00 மணிக்கு முத்தால காலப் பூசையும், 12:00 மணிக்கு உச்சிக்காலப் பூசையும் முடிந்து மதியம் ஒரு மணிக்கு நடை சார்த்தபடுகிறது. மீண்டும் மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கபடுகிறது. மாலை 6:00 மணிக்கு சாயரக்சை பூசையும், இரவு 8:00 மணிக்கு இரண்டாம் காலப் பூசையும். இரவு 9 மணிக்கு அர்த்தயாம பூசையும் செய்யப்படுகிறது. திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர பூசை சடங்குகளும், பிரதோசம் போன்ற இருவார சடங்குகளும், அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி, சதுர்த்தி போன்ற மாதாந்திர சிறப்பு பூசைகளும் செய்யப்படுகின்றன.

சிறப்பு விழாக்கள்
     பதினோரு நாள் விழாவாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம் இங்கு முக்கிய வாழாவாக கொண்டாபட்டுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடிக் கார்த்திகை, திருக்கார்த்திகை, கந்த சஷ்டி ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

அமைவிடம்
     திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள வயலூர் முருகன் கோயிலை பக்தர்கள் உள்ளூர் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸிகள் மூலம் அடையலாம். திருச்சி ரயில் நிலையத்திலிருந்து இக்கோயில் 10.6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இக்கோயில் 15.4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

திறந்திருக்கும் நேரங்கள்
     கோயில் காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். திருவிழா நாட்களில் அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

முகவரி
வயலூர் முருகன் கோவில்,
குமாரவயலூர் கிராமம்,
திருச்சிராப்பள்ளி.
பேசி: +91-431-2607344