பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில்

poombarai

     பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு மேற்கே 18 கி.மீ தொலைவில் உள்ள பூம்பாறை என்னும் சிற்றூரின் நடுவில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும்.

     இந்தியாவில் இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன. அவை பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை மற்றும் பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை. பழனி முருகனும், பூம்பாறை முருகனும் உருவத்திலும் ஒரே மாதிரி இருக்கும்.

     சுமார் 10 அல்லது 12ம் நூற்றாண்டு வாக்கில் சித்தர் போகர் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பழனி மலைக்கும் பூம்பாறை (மேற்கு தொடர்ச்சி மலைகள்) மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி (யானை கெஜம்) குகையில் தங்கி, நவபாசன சிலையை அமைத்தார். அவர் முதலில் அமைத்த சிலையை பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டத்துடன் உருவாக்கியதால் அந்த சிலைக்கு தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார்.

     பின்னர் போகர் வெளிநாட்டிற்கு ( சீனா) சென்று திரும்பிய பின்னர் மீண்டும் யானை முட்டி குகைக்கு வந்து பூம்பாறையில் தற்போது உள்ள சிலையை வடிவமைத்தார். கோவிலில் உள்ள கல்வெட்டுகளின்படி, இந்த கோவில் சேர வம்சத்தின் அரசரால் கட்டப்பட்டது.

     பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சேர மன்னன், குருமூப்பு முருகன் சிலையை சுற்றிலும் ஒரு மண்டபத்தை எழுப்பினார். சேரன் ஆட்சியின் போது இந்த கோயிலுக்கு வந்த அருணகிரிநாதர் இந்த கோயிலில் தங்கி குருமூப்பு முருகனை வணங்கி வழிபட்டார்.

     பூம்பாறை மலைக்கு வந்த அருணகிரிநாதர் இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கி விட்டார். அச்சமயம் ஒரு ராட்சசி அருணகிரிநாதரைக் கொல்ல வந்தாள். அப்போது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரிநாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு, குழந்தையும் தாயும் தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டாளாம். இச்சம்பவத்தை தனது ஞானதிருஷ்டியால் அறிந்த அருணகிரிநாதர் குழந்தை உருவில் வந்து தன் உயிரைக் காத்த முருகனை குழந்தை வேலர் என்று அழைத்தார்.

     அருணகிரிநாதர் திருப்புகழில் பூம்பாறை முருகன் குறித்து பாடிய பாடல்:

     பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
          பூங்கதலி கோடி திகழ் சோலை
     பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
          பூம்பறையின் மேவு பெருமாளே.

     கோவிலில் முருகப்பெருமானின் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலை உள்ளது.

poombarai

     குழந்தை வேலப்பர் கோயிலானது முகமண்டபம், மகாமண்டபம், இடைநாழிகை, கருவறை ஆகிய கூறுகளைக் கொண்டுள்ளது. கோயில் கருவறைக்கு எதிரில் பிரகாரத்தில் மயில், பலிபீடம், கொடிமரம், விளக்குத் தூண் போன்றவை அமைந்துள்ளன. கருங்கல்லால் கட்டபட்ட கருவறையின் மேலே சுதையால் ஒற்றை நிலை விமானம் அமைக்கப் பட்டுள்ளது. விமானமானது நாற்கர வடிவிலான சிகரத்துடன் உச்சியில் உலோக கவசத்துடன் அமைந்துள்ளது.

     கருவறையில் போகரால் நவபாசாணத்தால் அமைக்கபட்ட குழந்தை வேலர் சிலை அமைந்துள்ளது. குழந்தை வேலப்பரின் உருவம் பழனி தண்டாயுதபாணியை ஒத்த உருவத்தில் உள்ளது. இரு கைகளுடன் உள்ள அவர் வலக் கையில் தண்டத்தையும், இடக் கையை தொடையின் முன்புறம் வைத்த வலதம்பி முத்திரையுடன் நின்ற கோலத்தில் உள்ளார். இந்த குழந்தை வேலப்பர் சம்பாத நிலையிலும் பழனி தண்டாயுதபாணி திரிபங்க நிலையிலும் காணப்படுகிறார்.

     கருவறையின் வடக்கில் கிழக்கு நோக்கி சிவனுக்கு சிற்றாலயம் அமைந்துள்ளது. முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி விநாயகர், பைரவர், நவகிரகம், இடும்பன், நாகர், அருணகிரிநாதர், மள்ளர், பத்திரகாளியம்மன் ஆகியோருக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறைக்கு முன்புறம் இடைநாழிகையின் வெளிப்புறச் சுவரில் சிவகாமி உடனுறை நடராசர், பிரம்மன் ஆகியோரின் திருமேனிகள் நிறுவப்பட்டுள்ளன.

     இக்கோயிலானது பழனி முருகன் கோயிலுக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது எனப்படுகிறது. கோயிலின் தல மரமாக குறிஞ்சிச் செடி உள்ளது.

poombarai

     ஒவ்வொரு ஆண்டும் தை அல்லது மாசி மாதத்தில் பத்துநாள் உற்சவமும், தேர்த் திருவிழாவும் சிறப்பாக நடத்தப்படுகிறது. தைப் பூசத்திற்குப் பிறகு வரும் கேட்டை நட்சத்திரத்தன்று விழா நடைபெறுகிறது.

     மலைப் பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் தேர் வீதி உலா இங்கு மட்டுமே நடைபெறுகிறது. இங்கு தேரின் முன்புறம் மட்டுமல்லாது பின்பிறமும் வடம் பிடித்து தேர் இயக்கப்படுகிறது. மேலும் முருக பக்தர்கள் வரிசையாக நின்று தேர் அச்சின் மீது 25000 தேங்காய்களை உடைக்கும் வழிபாடு கண்கொள்ளா காட்சியாகும்.

     திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

     இந்த கோயில் பழனி தேவஸ்தானத்தின் ஆளுகையின் கீழ் வருகிறது.

திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:
அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில்,
பூம்பாறை - 624 103.
கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம்.