பவளமலை முத்துக்குமாரசாமி கோயில்

pavalamalai

     பவளமலை முத்துக்குமாரசாமி கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பவளமலை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். பவளமலை முருகன் கோவில் கிபி 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

     குன்றில் உள்ள சுமார் 60 படிகள் ஏறிச்சென்றால் திருக்கோவில் மூலவரை தரிசனம் செய்யலாம். கிரிவல பாதையில் வாகனங்களிலும் செல்லலாம்.

     ஒரு முறை வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அது படிப்படியாக பெரியதாகி, அவர்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்து. பின்னர் அது போராக மாறியது. தங்கள் பலத்தையும் சக்தியையும் காட்டி அவர்கள் போர் செய்தனர். யாரும் யாரையும் வெல்ல முடியாத நிலை. வாயுபகவான் தனது சக்தியை எல்லாம் திரட்டி மேரு மலையை தகர்த்துக் காட்டுகிறேன் என்று சவால் விட்டு மலையுடன் மோதுகிறார். காற்றின் வேகத்தை தாங்க முடியாக மேரு மலையின் சில பாகங்கள் மலையை விட்டு பறந்தன. அதில் ஒரு துளி விழுந்த இடம்தான் பவளமலை என்கிறது பவளமலையின் தல புராணம்.

     மகேசனாகிய சிவபெருமான் இந்த கோவிலில் குடியிருந்து அவரை நாடி வரும் மக்களுக்கு நல்லாசி வழங்குகிறார். இந்த லிங்கமானது, அருகில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் உழவுப்பணி செய்யும்போது சுயம்புவாக தோன்றியது என்றும், அதையே எடுத்து வந்து மலை மீது வைத்து தொன்று தொட்டே வணங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

     பவளமலை கோவிலில் சிவபெருமானுக்கு ஈடாக முருகபெருமானை கொண்டு நடைபெறும் திரிசத அர்ச்சனை சிறப்பு மிக்கதாகும். திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதம் என்பது முந்நூறு. அதாவது முருக பெருமானுக்கு செய்யப்படும் புகழ் மிக்க அர்ச்சனை இது. ஆறுமுகக்கடவுள் என்றுபோற்றப்படும் முருகன், பன்னிரு கைகள், ஆறு முகத்துடன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று சிவபெருமானைப் போன்று ஐந்தொழில்களையும் மேற்கொள்பவராக இருக்கிறார். அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது ஒரு முகத்துக்கு 50 அர்ச்சனைகள் வீதம், ஆறு முகங்களுக்கும் சேர்த்து 300 அர்ச்சனைகள் செய்வதே திரிசத அர்ச்சனை.

pavalamalai

     சூரபத்மனை வதம் செய்து இந்திரலோகத்து தேவர்களை எல்லாம் முருக கடவுள் மீட்டார். எனவே அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் தேவர்களின் அரசன் இந்திரன் தலைமையில் தேவர்களால் செய்யப்பட்ட அர்ச்சனையே திரிசத அர்ச்சனை. எனவே எதிரிகளை வீழ்த்தும் திரிசத அர்ச்சனை என்றும் இது அழைக்கப்பட்டது.

     திருமணத்தடை நீங்க, குழந்தை பேறு கிடைக்க, தொழில், அரசியலில் எதிரிகளிடம் இருந்து வெற்றி பெற விரும்புபவர்கள் பவளமலையை தேடி வந்து திரிசத அர்ச்சனையை சிறப்பாக செய்வது வழக்கம்.

     மூலவர் முத்துக்குமார சுவாமி பிரம்மசாரியாக எழுந்தருளியுள்ளார். வாயு மூலையில் வள்ளி தெய்வானை முருகனைத் திருமணம் செய்து கொள்வதற்காக தவம் இருக்கின்றனர். அதாவது, திருமணத்துக்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு தரிசிக்கலாம். கைலாசநாதர், பெரியநாயகி அம்பாள் சந்நிதியும் உள்ளது. செவ்வாய் காலை சுவாமிக்கும், அம்பாளுக்கும் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

     இக்கோயிலில் இடும்பன், விநாயகர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இங்கு கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன.

     இக்கோயிலில் சிவாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. தை மற்றும் ஐப்பசி மாதங்களில் திருவிழா நடைபெறுகிறது. தை மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது.

     திருக்கார்த்திகை, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம், போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகின்றன.

pavalamalai

     பச்சைமலை, பவளமலை எங்கள் நாடு, பரமேஸ்வரன் வாழும் மலை எங்கள் நாடு என்ற குற்றாலக் குறவஞ்சியில் ஒரு வரி இருக்கிறது. முல்லைக்கு தேர்கொடுத்த பாரி ஆண்ட பகுதி என்ற பெருமை கொண்டதும் இந்த பவள மலையே.

திறக்கும் நேரம்:
     காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்:
     ஈரோட்டில் இருந்து 35 கி.மீ., தூரம் கோபிசெட்டிப்பாளையம். அங்கிருந்து அந்தியூர் டவுன் பஸ்சில் 3 கி.மீ., சென்றால் முருகன்புதூர் பஸ் ஸ்டாப். அருகில் கோயில்.

தொடர்பு கொள்ள:
அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில் பவளமலை,
ஈரோடு.
போன்: +91 97157 40960