சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
செம்பருந்து (Brahminy Kite) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் |
கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் ![]() கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் அல்லது கந்தசாமி கோயில் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெருநகரத்தின் பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பெயர் கந்தசுவாமி. உற்சவர் பெயர் முத்துக்குமாரசுவாமி. அம்மன் பெயர் வள்ளி, தெய்வானை. தீர்த்தம் சரவணப்பொய்கை. ஆகமம்/பூஜை குமார தந்திரம். சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும், கொடிமரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும் உள்ளது. ராஜகோபுரமும், பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது. உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். சிறப்பு நாட்களில் இவருக்கே முதன்மைப் பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள குளக்கரை சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சித்தியும், புத்தியும் ஒருகாலை மடக்கி, மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும், இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். ![]() வரலாறு:1673-ஆம் ஆண்டில், வேளூர் மாரி செட்டியார் மற்றும் கந்தப்ப ஆச்சாரி ஆகிய நண்பர்கள் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒருமுறை செல்லும் வழியில் இருந்த எறும்புப் புற்றில் இருந்து முருகனின் சிலையை கண்டெடுத்தனர். முருகப்பெருமான் அவர்களின் கனவில் தோன்றி, தன்னை சென்னைக்கு எடுத்துச் சென்று பூஜை செய்யுமாறு கூறினார். அவ்வாறே செய்த மாரி செட்டியார், தனது மனைவியின் நகைகளை விற்று கோயில் கட்ட நிதி உதவினார். முதியலு நாயக்கன் என்பவர் தற்போதைய கோயில் அமைந்துள்ள நிலத்தை தானமாக வழங்கினார். ஆரம்பத்தில் சிறிய அளவில் கட்டப்பட்ட இக்கோயில், பின்னர் 1780-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் (காலயுக்தி ஆண்டு மாசி மாதம்) மயிலாப்பூர் கும்பலிங்க ஆச்சாரி என்பவரால் கற்கள் கொண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு, 1781-ஆம் ஆண்டு பங்குனி மாதம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. நேர்த்திக்கடன்: பிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில், இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது. தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள சித்திபுத்தி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் தீரும் என நம்புகின்றனர். வள்ளலார் (இராமலிங்க அடிகள்) இக்கோயிலின் மீது 'தெய்வமணி மாலை' உள்ளிட்ட பாடல்களைப் பாடியுள்ளார். பாம்பன் குமரகுருதாச சுவாமிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். தை மாதம் 18-ஆம் நாள் பிரதான திருவிழா, கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் இக்கோவிலில் கொண்டாடப் படுகின்றன. திறந்திருக்கும் நேரங்கள்
கோயில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.அமைவிடம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம். பேருந்து மூலம் வருபவர்கள் உயர்நீதிமன்றம், பாரிமுனை அல்லது பூக்கடை பேருந்து நிறுத்தங்களில் இறங்கி நடந்து சென்று கோயிலை அடையலாம்.முகவரி
கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவில்44, ரசப்பா செட்டி தெரு, ரட்டன் பஜார், பார்க் டவுன் (பாரிமுனை), சென்னை - 600003. பேசி: +91 44 25352190 |