எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயில் ![]() எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், எட்டுக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்கோயில் அருணகிரிநாதரால் பாடல்பெற்ற கோயில் ஆகும். முத்தரசன் என்னும் சோழ மன்னன் முருகன் சிலை ஒன்றை வடிக்கும் படி சில்ப்பிமுனி என்ற சிற்பியிடம் ஆணையிட்டான். சிற்பியும் முருகன் சிலையை வடித்துக் கொடுத்தார். அந்த சுவாமியின் பெயர் அழகிய கந்தசாமி. சிலையின் திரு உருவத்தில் நகம், நரம்பு முதற்கொண்டு காணலாம். அதன் தெய்வீக அழகைக் கண்ட சோழன், இனி இது போல் இன்னொரு சிலையை சிற்பி செய்து விடக் கூடாது என்பதற்காக சிற்பியின் கட்டை விரல்களை வெட்டி விட்டான். சில்ப்பி முனி செய்த இந்த முதல் சிலை தற்போது சிக்கலுக்கு அருகில் 2கி.மீ தொலைவில் - பழைய பெயர்- பொருள் வைத்த சேரி - தற்பொழுது பொரவாச்சேரி என்ற ஊரில் உள்ளது. இதை அடுத்து அருகில் உள்ள எட்டுக்குடி கிராமத்துக்குச் சென்ற சிற்பி அங்கு தன் கட்டை விரல்கள் இல்லாமலேயே எட்டு விரல்களால் மயில் வாகனத்தோடு ஆறுமுகனுக்கு ஒரு சிலை வடித்தான். அந்த சிலை மிகவும் உயிர் துடிப்புடன் அமைந்து ஆறுமுகனின் உடலில் அக்னி ஜுவாலையும் உண்டாயிற்று. திடீரென சிலைக்கு உயிர் வந்து முருகன் அமர்ந்து இருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. அப்போது அங்கிருந்த மக்கள் எட்டிப் பிடி எட்டிப் பிடி எனக் கூச்சலிட்டு மயிலப் பிடித்து சிற்பியிடம் கொடுத்தனர். சிற்பியும் மயில் நகத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்தவுடன் மயில் பறப்பது நின்றதாம். எட்டிப் பிடி என்ற வார்த்தையே காலப்போக்கில் எட்டுக் குடி என்று ஆனதாகவும் ஒரு கூற்று உண்டு. சிற்பி வடித்த அந்த திருவுருவ மூர்த்தி தான் எட்டுக்குடியில் மூலவராக இருக்கும் முருகப்பெருமான். சன்னதிகள்
இக்கோயிலில் கணபதி, ஜுரதேவர், சீனிவாச சௌந்திரராஜப்பெருமாள், ஆஞ்சநேயர், மனோன்மணி அம்மை, அய்யப்பன், மகாலட்சுமி, நவக்கிரகங்கள், சனி பகவான், பைரவர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. வான்மீகர் என்ற சித்தர் இங்கு சமாதியானதாகக் கூறுவர். இக்கோயிலின் தலவிருட்சமான வன்னி மரத்தடியில் இவரது சமாதி இருக்கிறது. வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார். வான்மீகரைப் பற்றி சித்தர் போகர் பாடியுள்ளதால் இவரும் சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார்.மூலவர் கருவறையில் முருகன், வள்ளி தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்துள்ளார். மூலவர் அமர்ந்துள்ள மயில் சிற்பத்திற்கு ஆதாரமாக தரையின் மீதுள்ள அதன் இரு கால்கள் உள்ளன. முருகன் சன்னதிக்கு வலது புறத்தில் லிங்கத்திருமேனியை கருவறையில் கொண்ட சௌந்தரேசுவரர் சன்னதியும், இடது புறத்தில் இறைவி ஆனந்தவல்லி அம்மன் சன்னதியும் உள்ளன. கோயிலின் முன்பாக சரவணப் பொய்கை தீர்த்தக் குளம் உள்ளது. இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களுக்கு சிலைகள் உள்ளது. சூரசம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம் .கோவிலின் கன்னி மூலையில் மனோன்மணி தாயார் அருள் செய்கிறார். ![]() தலபுராணம்
ஒரு சமயம் திருக்கயிலைக்கு சிவ பெருமானை வழிபட வந்த பிருங்கி முனிவர், அங்கிருந்த பார்வதி தேவியை வழிபடாமல் வண்டு உருவம் எடுத்து, ஈசனை மட்டும் வலம் வந்து தொழுது சென்றார். ஈசனிடம் இருந்து தம்மை தனியாகப் பிரித்தது அம்பிகைக்குப் பிடிக்கவில்லை. ஈசன் திருமேனியில் தாமும் இடம் பெறவேண்டி பூலோகம் வந்து தவம் மேற்கொண்டார். பூலோகத்தில் ஓரிடத்தில் நான்கு வேதங்களும் ஈசனை வழிபட்டுக் கொண்டிருந்தன. அத்தலம் வேதாரண்யம். அதன் அருகில் எட்டி மரங்கள் நிறைந்த காட்டில் வால்மீகி முனிவர் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். அங்கு வந்த பார்வதிதேவி, ஈசனின் திருமேனியில் இடம்பெற வேண்டி, இங்கே தவம் புரிய வந்ததாகக் கூறினாள். 'கேதார கவுரி' விரதத்தை அனுஷ்டித்துப் பரமனை திருப்தி செய்து வேண்டிய வரம் பெறலாம்' என்று வழி சென்னார் வால்மீகி.எட்டி வனத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து புரட்டாசி வளர்பிறை அஷ்டமி தொடங்கி, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாள் விரதம் இருந்து ஐப்பசி அமாவாசை அன்று 'கேதார கவுரி' விரதத்தை நிறைவு செய்தார் பார்வதி தேவி. உடனே ஈசன் அங்கு தோன்றி, தனது இடப்பாகத்தில் அன்னை பார்வதியை இருத்தினார். ஈசனும் அம்பாளும் ஒன்று சேர்ந்த அந்தத் திருவடிவே அர்த்த நாரீஸ்வரர். பார்வதி தேவி எட்டுக்குடியிலேயே கேதார கவுரி விரதத்தை அனுஷ்டித்து ஈசனின் சரிபாதி ஆனார் என்கிறது தலபுராணம். பார்வதிதேவி வழிபட்ட சிவலிங்கம் சவுந்தரேஸ்வரர் என்ற பெயரில் உள்ளது. இத்தல அம்பிகையின் திருநாமம் ஆனந்த வல்லி என்பதாகும். கேதார கவுரி விரதம் இருந்து எட்டுக்குடியில் ஈசனின் உடம்பில் உமையவள் சரிபாதி ஆனதால் இத்தல அம்பாள் ஆனந்த பரவச நிலையில் உள்ளாள். இவளிடம் கேட்டது உடனே கிடைக்கும் என்பது ஐதீகம். எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி, நாம் பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக் கொண்டு காட்சி தருபவர். நாம் குழந்தையாக நினைத்துப் பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்துப் பார்த்தால் வயோதிக வடிவிலும், இளைஞனாக நினைத்துப் பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார். விழாக்கள்
இக்கோயிலில் சஷ்டி விரதத்தையும், கவுரி விரதத்தையும் ஒன்றுசேர கடைபிடிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் இதுதான் என்பர். சித்ரா பௌர்ணமி திருவிழா இங்கு பத்து நாட்கள் நடைபெறும். பௌர்ணமிக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலாபிஷேகம் துவங்கும். பௌர்ணமிக்கு மறுநால் வரை தொடர்ந்து நடை அடைக்காமல் பாலபிஷேகம் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். பௌர்ணமிக்கு முதல் தேரோட்டம் நடைபெறும். இவ்விழாவில் பல்லாயிரம் பால் காவடிகள் வந்து கலந்து கொள்ளும். ஐப்பசியில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களும், வைகாசி விசாகம் விழா ஒரு நாளும் நடத்தப்படும். இக்கோவிலுள்ள அம்மையப்பருக்கு மார்கழி திருவாதிரையில் விழா எடுக்கப்படும். இது தவிர மாத கார்த்திகைகளில் சிறப்பு பூஜை உண்டு. இக்கோயிலில் சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இப்பூஜை செய்யப்படுகிறது. எதிரிகளால் ஏற்பட்டும் நியாயமான துன்பங்களுக்காக மட்டுமே இப்பூஜையைச் செய்ய வேண்டும். எதிரிகளை அழிக்கும் நோக்குடன் செய்தால் பலன் வேறு மாதிரியாக அமையும். தேய்பிறை சஷ்டி அல்லது அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் இப்பூஜையைச் செய்வார்கள். இதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். ![]() குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம் வாய்க்கவும், கல்வியில் சிறந்த விளங்கவும் இங்குள்ள முருகனைப் பிரார்த்திக்கலாம். பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்தால், அவர்களின் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் தூணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவனாக காட்சியளிக்கிறான். சூரனை அழிப்பதற்காக இக்கோலம் கொண்டுள்ள முருகனைக் குறித்து குழந்தைகளுக்கு விளக்கிச் சொன்னால் அவர்கள் பயம் நீங்கி ஆற்றல் உடையவர்களாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை. நடை நேரம்
இக்கோயில் காலை 4.30 முதல் நடுப்பகல் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.அமைவிடம்
சென்னையில் இருந்து 332 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். தஞ்சாவூர், திருச்சி, சென்னை, மதுரை என மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் திருவாரூரை அடைய பேருந்து வசதிகள் உள்ளன. ரயில் மூலமாகவும் திருவாரூரை வந்தடையலாம். ரயில் நிலையத்தில் இருந்து எட்டுக்குடியை சென்றடைய பேருந்து வசதிகள் உள்ளன.இக்கோயில் திருவாரூர்-வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி எட்டுக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம். முகவரி
எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயில்எட்டுக்குடி - 610212. நாகப்பட்டினம் மாவட்டம் பேசி: +91-4366-245426 |