திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் ![]() திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டி போகர் நகரில் திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. தரைதளத்தில் ஒன்றும், பாதாளத்துக்குள் (பூமிக்கு அடியில்) ஒன்றும் என 2 கருவறைகளை கொண்டதாக இக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் சுமார் 16 அடி ஆழத்தில் உள்ளது. பாதாளத்தில் உள்ள கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறி இறங்கிச் செல்கின்றனர். 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னிதி அமைந்திருக்கிறது. 8க்கு 8 அடி என்ற அளவிலான கருவறையில் முருகன் வீற்றிருக்கிறார். பழனி முருகன் கோவிலில் நவபாஷாண சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் மறு அவதாரமாக கருதப்படும் திருக்கோவிலூர் சித்தர், சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில், 1 1/2 அடி உயரத்தில் முருகன் சிலையை உலோகத்தால் வடிவமைத்து பாதாள அறையில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார். இந்த ஆலயம் நாளடைவில் வழிபாடின்று போன நிலையில், சில நூற்றாண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரம் சமஸ்தானத்தில் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியின் வம்சாவளியை சேர்ந்த கந்தமாறன் என்ற மிராசுதாரர், மீண்டும் பூஜைகள் நடைபெறச் செய்தார். ![]() இந்த கோவிலுக்குள் நீங்கள் நுழையும் போதே கோவிலின் முன்புறம் காவல் தெய்வமான சங்கிலி கருப்பசாமி 15 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். இந்த சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டதாகும். உலகத்திலேயே முருகன் கோவிலில் சங்கிலி கருப்பன் சிலை இருப்பது இங்கு மட்டும்தான். ![]() கோவிலின் முன்பாக குளம் போல் நீர் நிரம்பி உள்ள இடத்தில் ஜலகண்டேஸ்வர் நமக்கு காட்சி தருகிறார், முன்மண்டபத்தில் செல்வவிநாயகர் அருள் பாலிக்கிறார். அர்த்த மண்டபத்தில் கிழக்கு திசை நோக்கி பரிவார தெய்வமாக காலபைரவர் காட்சியளிக்கிறார். அடுத்து 16 அடி ஆழத்தில் உள்ள முருகனை காண 18 படி கொண்ட குகையில இறங்கி சென்றால் இங்கு நாம் முழுக்க முழுக்க செம்பினால் செய்யப்பட்ட பாதாள செம்பு முருகர் காட்சி அளிப்பார். அவரின் அருகிலேயே 650 வருடம் பழைய திருக்கடையூர் சித்தர் உருவாக்கிய சிறிய முருகன் சிலை இருக்கும். பொதுவாக நம் முருகன் குடி கொண்டிருக்கும் பெரும்பாலான மலைக் கோவில்களுக்கு செல்லும்போது ஏற்றமாகவும் திரும்பி வரும்போது இறக்கமான பாதையாக இருக்கும். ஆனால் இந்த கோவிலில் நாம் முருகனை இறங்கி சென்று தரிசித்து விட்டு ஒரு ஏற்றமான பாதையில் வருவது சிறப்பானது. அது நம் வாழ்க்கைக்கும் ஒரு ஏற்றத்தை கொடுக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது. இந்த கோவிலுக்கு 9 வாரங்கள் தொடர்ந்து வந்தால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் எல்லாம் கைகூடி வரும் என இங்கு வந்து பயன் அடைந்த பலர் கூறுகிறார்கள். நவகிரகங்களால் நமக்கு உண்டாகக்கூடிய தோஷங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் இந்த பாதாள செம்பு முருகன் போக்கி விடுவார் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்குரிய தெய்வமாக முருகன் திகழுகிறார் அதனால் அரசு வேலையில், காவல்துறை சம்பந்தமான வேலைகள், ராணுவம் சம்பந்தமான வேலைகளில் பதவி உயர்வு, சம்பள உயர்வு வேண்டி இங்கு வந்து முருகனை தரிசித்து செல்கிறார்கள். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பாக சொல்லப்படுவது கருங்காலி, செங்கருங்காலி மாலைகள். இந்த கோவிலில் தரப்படும் கருங்காலி மாலையை உங்கள் கழுத்தில் அல்லது உங்கள் கைகளில் எப்போதும் அணிந்தவாறு இருந்தால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி மட்டுமே வந்து சேரும் என்கிறார்கள். இந்த கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட மாலையை நாம் அணிந்திருக்கும் போது எப்படி பட்ட கெட்ட சக்திகள் ஆக இருந்தாலும் நம்மை நெருங்க முடியாது என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள முருகனின் சிலையானது சக்தி வடிவத்தைக் குறிக்கும். ஏனென்றால் இந்த கோவிலில் முருகனது வேல் இடது புறத்தில் காணப்படும். இந்த கோவிலில் கட்டணத் தரிசனம் என்பது இல்லை. இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்குமே பொது தரிசன முறையே உள்ளது. இந்த கோவிலில் நாள்தோறும் மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. திருவிழாக்கள்:
இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும்,சஷ்டி,கிருத்திகை உள்ளிட்ட முருகனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.சங்கிலி கருப்பு சாமிக்கு அமாவாசை நாளில் விசேஷ வழிபாடு நடைபெறுகிறது. கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி போன்ற முக்கிய திருவிழாக்கள் இங்கே பிரசித்தமாகக் கொண்டாடப்படுகின்றன. நடை திறப்பு நேரம்:
காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைமாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செல்லும் வழி:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் அருகிலுள்ள பேருந்து நிலையம் இராமலிங்கம்பட்டி, திண்டுக்கல். அருகிலுள்ள இரயில் நிலையம் திண்டுக்கல். அருகிலுள்ள விமான நிலையம் மதுரை.முகவரி :
பாதாள செம்பு முருகன் திருக்கோயில் இராமலிங்கம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் - 624622. பேசி: +91-9787557011, 9787577011 |