அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் ![]() அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் (Anuvavi Subramaniyaswamy Temple) கோவையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், பெரிய தடாகத்தில் கணுவாய் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மருதமலை மலைகளின் வடக்குப் பக்க சரிவில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. சுமார் 500 படிக்கட்டுகள் உள்ளன. வடக்கே குருவிருக்ஷமலை, தெற்கே அனுவாவிமலை, மேற்கே கடலரசி மலை என்று திக்கெல்லாம் சூழ்ந்து நிற்க, ஏறத்தாழ ஒரு பசுமைப் பள்ளத்தாக்கில் குடியேறியிருக்கிறான் முருகன். கோயிலில் ஏறும் போது நடுவில் வடக்கு நோக்கி அனுமான் சிலையுடன் ஒரு துணை சன்னதியும் உள்ளது. சஞ்சீவி மலையை இலங்கைக்கு எடுத்துச் செல்லும்போது அனுமான் மிகவும் தாகமாக உணர்ந்தார். முருகன் தனது ஈட்டியை எறிந்து நீரூற்றை ஏற்படுத்தி, அனுமன் முன் தோன்றச் செய்து, அவரது தாகத்தைத் தணித்தார். அனு என்பது அனுமனையும் வாவி என்பது நீர் என்ற பொருளையும் குறிப்பதால் இவ்விடம் அனுவாவி என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. ![]() அனுமனுக்கு குமரன் அருள்பாலித்ததால் ‘அனுமக்குமரன் மலை’ என்ற பெயரும் உண்டு. அனுவாவி பத்துப்பாட்டு என்ற நூலில் இந்த ஸ்தல வரலாறு அழகான கவிதையாக்கப்பட்டிருக்கிறது. ராமன் விட்ட அம்புகள் கந்தனின் வேல் போல் பிரகாசித்ததாக இரண்டு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இத்தலத்துக்குக் கிழக்கேயுள்ள வடமதுரை என்னும் ஊரின் விருத்தேஸ்வரர் குளத்தை அடுத்து ஒரு மரத்தின் வேர் இரு கிளைகளாகப் பிரிந்து காணப்பட்டதாம். ஒரு பிரிவிலிருந்து வெண்ணிறப் பாலும் மற்றதிலிருந்து சென்னிறப் பாலும் வடிவதைக் கண்டார் சுந்தரமூர்த்தி நாயனார். அவ்வேர், அனுவாவியிலிருக்கும் தல விருட்சமான மாமரத்தின் மீது கொடியாகப் படர்ந்திருந்த தாவரத்தின் வேர்தான் என்று கண்டறிந்தார்! இவ்வியற்கை வினோதம் அனுவாவியின் தலச் சிறப்பால் விளைந்ததே என்று அவர் உணர்ந்து, வாழ்த்தி வழிபட்டதாகச் சொல்கின்றனர். விண்ணாவரங் கொடி, விண்ணாடும் கொடி என்று பெயர்கள் பெற்ற அக்கொடி, அனுவாவி ஸ்தல விருக்ஷமான மாமரத்தில் இன்றும் படர்ந்திருப்பதைக் காணலாம். மலைச்சாரலில் சில குகைகள் இருக்கின்றன. அவற்றில் அக்காலத்தில் முனிவர்களும் பாம்பாட்டிச் சித்தரும் தவமியற்றியிருக்கிறார்கள். ![]() சுயம்பு மூர்த்தியாக அருள் பாலித்த சுவாமியும், தல விருட்சமாக இருந்த 5 மாமரங்களும் கடந்த 1957ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்டது. அதன் பின் புதிய கோயில் அமைக்கப்பட்டு 1969ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மலைக்கோயிலுக்கு முன் இடும்பன் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னதியும் உள்ளது. சிவபெருமான் அருணாசலேஸ்வரராக அருள்பாலிக்கிறார். இங்குள்ள ஊற்று நீரின் ஆரம்பம் எங்குள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை. மைசூர் மன்னன் ஒருவன் இங்குள்ள ஊற்றை ‘காணாச்சுனை’ என பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளான். எந்த காலத்திலும் வற்றாத இந்த புனித நீர் பக்தர்களின் தாகம் தீர்க்கிறது. திருமணம் செய்து கொள்ள சிரமப்படும் பக்தர்களும், குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினரும் இங்கு வந்து இத்தலத்தை வணங்கி, தங்கள் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. அமைவிடம்
கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தூரம் சென்றால் சின்னதடாகம் என்ற பகுதி உள்ளது. இங்கிருந்து இடதுபுறம் திரும்பி 2 கி.மீ. தூரம் சென்றால் இந்த கோவில் இருக்கும் மலைப்பகுதியை அடையலாம். கோவை உக்கடத்திலிருந்து அனுவாவி கோவிலுக்கு நகரப் பேருந்து (11A) செல்கிறது. இங்கே இருந்து மருதமலை கோவில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.திறந்திருக்கும் நேரங்கள்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.முகவரி
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்,அனுவாவி - 641 108. கோயம்புத்தூர் மாவட்டம். பேசி: +91-94434 77295, 98432 84842 |