திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் அம்மையும், அப்பனும் கலந்த ஒரு திருவுருவில் அம்மையப்பனாய் இறைவன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரில் எழுந்தருளி நிற்கும் சிறப்பு உலகிலேயே வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும். சிவதலமும், திருமால் தலமும் ஒன்றாய் அமைந்து விளங்கும் இத்திருத்தலமானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்புகளாலும் பெருமையுடையது இத்தலம். இங்கு தான் இறைவன் ஆண்பாதி பெண்பாதி என்கின்ற தோற்றத்துடன் உமையொருபாகனாக, மாதிருக்கும் பாதியனாக, மங்கை பங்கனாக அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு அருள் தருகிறார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல் மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்றது இத்தலம். சுமார் 1370 ஆண்டுகளுக்கு முன்னரே இத்திருத்தலமானது மரம், செடி, கொடிகளை உடையதாகவும், பல மாட மாளிகைகள் நிறைந்ததாகவும், இங்குள்ள குன்றானது (மலை) இயல்பாகவே செம்மை நிறமாகவும் இருந்ததால் இத்தலத்தை கொடிமாடச் செங்குன்றூர் எனவும் மற்றும் ரிஷிகள், தேவர்கள், முனிவர்கள் இருப்பிடமாக இருந்ததால் ‘திரு’ என்ற அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்றும் புகழப்பட்டது. புராண வரலாறு
முன்னொரு காலத்தில் ஆதிசேடனுடன் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என்பதை அறிய இருவரும் போர் செய்தனர். இப்போரினால் உலகில் பேரழிவுகளும், துன்பங்களும் நேரிடுவதை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர். இதன்படி ஆதிசேடன் தன்படங்களால் மேருவின் சிகரத்தின் முடியை அழுத்திக் கொள்ள வேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியை தளர்த்த வேண்டும் என்றும் கூறினர். ஆனால் வாயுதேவன் பிடியை தளர்த்த முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கிக் கொண்டார். இதனால் உயிரினங்கள் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்த பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிசேடனின் பிடியை தளர்த்த வேண்டினர். ஆதிசேடன் தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிசேடன் சிரத்தையும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறுண்டு விழுந்தது. அவற்றில் ஒன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடாகவும்) காட்சியளிக்கிறது.கோயில் அமைப்பு
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம், அருள்மிகு செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய மும்மூர்த்திகளின் சன்னதிகளையும் தனிதனியாய் உடைய ஆலயமாக அமைந்துள்ளது. தென்பகுதியில் கஜமுக பிள்ளையாரும், வடபகுதியில் ஆறுமுக சுவாமி ஆலயமும் அமைந்துள்ள இடத்திலிருந்து மலையின் முதல் படியானது தொடங்குகிறது. இவ்விடத்தினை மலையடிவாரம் என்று அழைக்கின்றனர். திருபடிகள் வழியாக சென்றால் முதலில் செங்குந்தர் மண்டபத்தையும் அதனை அடுத்து காளத்திசுவாமிகள் மண்டபம் திருமுடியார் மண்டபம் மற்றும் தைலி மண்டபத்தையையும் அடையலாம். தைலி மண்டபத்தில் மேற்குபுறத்தில் 7 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட நந்தி ஒன்று ராஜகோபுரத்தை பார்த்தவண்ணம் உள்ளது. பசுவன் கோவில் என்று அழைக்கப்படும் இதன் பின் உள்ள பகுதியை நாகமலை என்று அழைக்கின்றனர். இதனையடுத்து உள்ள சில மண்டபங்களை கடந்து சென்றால் அறுபதாம் படி என்னும் 'சத்தியப்படியினை' அடையலாம். இப்படியின் இறுதியில் முருகப்பெருமான் உள்ளார். ஒரே சீராக அறுபது படிகளை உடைய இவ்விடம் சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடு்த்துக்காட்டாக விளங்குகிறது. இம்மலையில் உள்ள 1206 படிகளிலேயே இப்படிகள்தான் மிகவும் சிறப்பு வாய்ந்தத படியாகும். அன்றைய காலத்தில் கொடுத்தல் வாங்கல் மற்றும் எண்ணற்ற தீர்க்க முடியாத வழக்குகளில் உண்மை நிலையை அறிய இப்படியினை பயன்படுத்தினார்கள். இப்படியின் மீது நின்று சத்தியம் செய்து கூறும் செய்திகளை சென்னை உச்சநீதிமன்றமே ஒப்புகொண்டதாக கூறுவார்கள். இதனையடுத்து பல மண்டபங்களை கடந்து சென்றால் கம்பீர தோற்றத்துடன் வடக்கு நோக்கிய வண்ணம் உள்ள ஐயங்கார பிள்ளையாரை வழிபடலாம் இங்கு 475 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட எழில்மிகு இராயர் கோபுரத்தை காணலாம். இவ்வலயத்தினுள் நாகு, கேது உள்ளிட்ட நவகிரக நாயகர்கள் உள்ளனர். அறுபத்து முணு நாயன்மார்கள் திருஉருவ சிலைகள் உள்ளது. பஞ்சலிங்க மூர்த்திகளின் கோவில்கள் உள்ளன. விசாலாட்சி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கூத்தப்பெருமான் ஆலயம் உள்ளது. ஏழு கன்னியர் கோவில் உள்ளது. சகஸர லிங்கம் எனப்படும் ஆயிரலிங்கர் ஆலயம் உள்ளது. தட்சிணாமூர்த்தி, சேட்டாதேவி, நாகர் ஆலயம், வைரவ தேவர், சூரிய தேவர், சித்தி விநாயகர் மற்றும் பல தெய்வங்களின் ஆலயங்கள் உள்ளது. நாகேஸ்வரர் ஆலயம் சிறப்பான சிற்பக்கலையுடன் உள்ளது மலையின் உச்சியில் வந்தீசுவரர் எனப்படும் பாண்டீஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது. வீர ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. தலவிருட்சம்
பூர்வகாலத்தில் திருபார்கடல் கடையப்பட்ட போது அதில் உண்ட அழுத்த திவலைகள் பூமியில் சிதறின. அதனால் தோன்றிய கற்பகவிருட்சங்களே தலவிருட்சம் என்று கூறுவர். இவை அனைத்தும் நோய் தீர்க்கும் மூலிகை மருந்தாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மக்களால் பெரிதும் போற்றப்பட்டன. இக் கோயிலின் தலவிருட்சம் இலுப்பை மரமாகும் மேலும் பெருமாள் கோயிலுக்கு புன்னைமரமும் அமைந்துள்ளது. இது குறிஞ்சி நாட்டை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.வழிபாட்டு முறை
முதலில் ஸ்தூல லிங்கமாகிய இராஜகோபுரத்தை வழிபட்டு பிறகு கோவிலின் உட்புகுந்து பலி பீடத்தின் அருகே நின்று ஆண்களாக இருந்தால் அட்டாங்க நமஸ்காரமும் பெண்களாக இருந்தால் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். பின் கர்ப்பக கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு ஏற்றவாறு வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று வழிபடவேண்டும். பிறகு நந்தி தேவரையும் துவாரபாலகரையும் வணங்கி கற்பூர ஒளியில் சிவசக்தி வடிவமான அர்த்தநாரீஸ்வரரை வணங்கி இரண்டாவது பிரதட்சணம் செய்ய வேண்டும். பிறகு நடராஜர், சிவகாமி அம்மை, தட்சிணாமூர்த்தி, பைரவர், வீரபத்திரர் முதலிய தெய்வங்களை முறையாக வணங்கவேண்டும். இறுதியாக நந்தி தேவரின் அருகே அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து நமது வழிபாட்டை பூர்த்தி செய்ய வேண்டும். வழிபாட்டின் பலன்கள்
அதிகாலை செய்யும் ஆலய வழிபாடு முதல் நாள் செய்த பாவத்தை போக்கும் மாலை நேரத்தில் பிரதோசகாலத்தில் செய்யப்படும் வழிபாடு நம் பிறவி தோறும் செயயும் பாவங்களை போக்கிவிடும் என்று சாஸ்திரம் கூறுகிறது.மண்டபங்கள்
திருமலையின் படிகளின் வழியாக செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும் பக்தர்கள் இளைப்பாறவும், வழி முழுவதும் பல மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில: செங்குந்தமுதலியார் மண்டபம், காளத்தி சுவாமிகள் மண்டபம், தைலி மண்டபம், சிங்க மண்டபம், நாடார் மண்டபம், செட்டிக்கவுண்டர் மண்டபம், தேவரடியார் மண்டபம், இளைப்பாற்றி மண்டபம், கோபுர வாயில் மண்டபம், நிறுத்த (அல்லது) ஆமை மண்டபம், விலாச மண்டபம், குகை மண்டபம், திருமுடியார் மண்டபம், கோடி அர்ச்சணை மண்டபம், சிங்கத்தூண் மண்டபம், அறுபதாம் படி மண்டபம்.தீர்த்தம்
1988-ம் ஆண்டு முதல் பக்தர்கள் வாகனங்களின் மூலமாகவும் செல்ல வழிசெய்யப்பட்டது. திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் மலையின் பாதை ஆரம்பமாகிறது. இச்சாலையின் கால்கோல் விழா 1984-ல் நடைபெற்றது சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இப்பாதையில் 15-05-88 முதல் தனியார் வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டது. 16-09-88 முதல் கோவில் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டும் வருகின்றன.அர்த்தநாரீஸ்வரர் உருவ அமைப்பு
அர்த்தம் என்றால் பாதி எனவும், நாரீ என்றால் பெண் எனவும், ஈஸ்வரன் என்றால் சிவன் எனவும் பொருள்படும் (அர்த்த + நாரீ + ஈஸ்வரர்). இறைவன் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் இத்தலத்தில் பெண்ணாகவும். ஆணாகவும் இரண்டற கலந்து அம்மையப்பன் என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வரராக அதிசியமான வடிவுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இறைவன் ஆணா அல்லது பெண்ணா என்ற கேள்வி எழுப்பி ஆண் என்றால் ஆண், பெண் என்றால் பெண் என்று புரட்சிகரமாகப் பதில் தருகிற உமையொருபாகனாக மங்கை பாங்கனாக மாதிருக்கும் பெருமானுக்கு முக உருவ வழிபாடு இல்லை. பாதியானாக காட்சி தருகின்ற சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய உன்னத திருத்தலம் ஆகும். இங்குள்ள அர்த்தநாரீஸ்வரன் மூலவர் திருவுருவம் கற்சிலை அன்று, சித்தர்களால் வெண்பாஷாணம் என்று அழைக்கப்படும் மிகுந்த நச்சுத்தன்மை உடைய பல வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. இந்த பாஷாணமானது வெண்குஷ்டம் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையது. ஆகவே பெருமானுக்கு செய்யும் அபிஷேக தீர்த்தம் மற்றும் பெருமானின் பாதத்தில் இருந்து வரும் சுனை நீர் தீர்த்தம் ஆகியவைகளை தொடர்ந்து பருகினால் இன்று மருத்துவர்களால் குணமாக்க முடியாத பல நோய்கள் குணமாகின்றன என்று மக்களால் முழுமையாக நம்பப் படுகிறது. மிகப்பழமையான சிலை என்பதால் அபிஷேகம் செய்து திருவுருவம் சற்று மாறி காட்சி தருகிறது. தற்சமயம் மதியம் ஒருவேளை மட்டுமே பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது இடது பாதி புடவையுடனும் வலது பாதி வேஷ்டியுடனும் அலங்காரம் செய்யப்படுகிறது. அர்ச்சனையின் போது எங்கும் இல்லாத புதுமையாய் ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் அமைந்து அர்ச்சிப்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும். செங்கோட்டுவேலவரை வணங்கி தென்புறம் மேற்கு நோக்கி அமைந்துள்ள அம்மையப்பன் சன்னதிக்கு செல்லலாம் வலது கையால் தண்டாயுதத்தை பிடித்தவாறு பராபரையின் பாகமாகிய இடது கையை இடையில் பிடித்திருக்க உடலை சற்று வலதுபுறமாக சாய்த்து மகரகுண்டம் காதில் அசைய முத்துமணி இரத்தினம் இடது காதில் அணி செய்ய தாமரையும் நிலோற்பலமும் ஒரே சமயத்தில் மலர்ந்திருப்பதை போல ஒன்றுக்கொன்று உற்று நோக்கிய கண்களில் இனிய தோக்கும் பூண்டு பச்சைநிற கோசீக உடை இடது தொடையையும், புலித்தோலாடை வலது தொடையும், அலங்கரிக்க முப்புரி நூல் ஒரு பக்க மார்பிலும், சுவர்ண சிமிழ் போன்ற நெருங்கிய தனபாரம் மறுபக்கமும், இயமனை உதைத்த நாக வீர வெண்குடையும், அணிந்த திருவடி ஒருபாகமும், அழகிய சிலம்பின் பிரபை விளங்கிய திருவடி ஒரு பாகமும் கொண்டு அம்மையப்பனாய் ஒரே திருமேனியாய் காட்சியளிக்கிறார். அம்மையப்பனின் திருமுன் திருவாயில் கிடையாது. மாறாக துவாரங்களுடன் கூடிய கல்லாலான பலகனி அமைக்கப்பட்டுள்ளது. தேவியார் இடப்பக்கம் பெற்ற வரலாறு
திருக்கயிலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தால் முருகப் பெருமான் கோபமுற்று நாகாசலம் வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. குமரன் கையிலையிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து பார்வதி தேவியார் மிகுந்த கவலை கொண்டிருந்தார். சோகமே உருவமாக காட்சியளித்தார். அதைக் கண்ட சிவன் அம்மைக்கு மகிழ்வூட்ட எண்ணி அவரைத் தாருக வனத்திற்கு அழைத்து வந்தார். அங்கு உல்லாசமாக எல்லா இயற்கை எழில்களையும் கண்டுவந்தனர். அங்கு ஒரு முல்லைக்கொடி மாதவி மரத்தை சுற்றி வளர்ந்துள்ளதை பார்வதிக்கு சிவன் காட்டினார். அதைக் கண்ட அம்மையார் வெட்கப்பட்டு சிவபெருமானின் இருகண்களையும் தன் கைகளால் மூடினார். பரமனின் கண்கள் மறைக்கப்படவே அண்டங்கள் இருண்டன. சிறிது நேரத்தில் அம்மையார் தன் இரு கைகளையும் விலக்கவே இருள் நீங்கியது. எதிர்பாராமல் ஏற்பட்ட இருளின் காரணமாக ரிஷிகளும், முனிவர்களும் மேற்கொள்ளும் நித்திய வழிபாட்டு முறைகள் மாறியது. இதை முனிவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். உமாதேவியார் சிவபெருமானை வணங்கி சுவாமி இத்தவறு மீண்டும் நிகழாதிருக்க வேண்டும். அதற்கு நாம் இருவர் என்ற முறை மாறி நாம் ஒருவர் என்ற உண்மை நிலை ஓங்க வேண்டும். அதற்கு ஒரே வழி தங்கள் உடலில் எனக்கு இடமளித்து இரட்சிக்க வேண்டும் என்றார். தேவியார் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு சிவபெருமான் தேவியாருக்கு தன் உடலில் இடம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். அதற்கு உமையே நீ இன்றே புறப்பட்டு இமயமலையில் உள்ள கேதார சிகரத்தை அடைந்து அங்கு தவம் செய்து பின் காசி நகரை அடைந்து விசுவநாத சொரூபத்தை வழிபட்டு காஞ்சி நகரில் உள்ள கம்பையாற்றங்கரையில் தவம் செய்வாய். அங்கு யாம் காட்சியளிப்பேன் என்றார். அதன்படியே தேவியார் பலகாலம் கடுந்தவம் மேற்கொண்டார். பின்பு காட்சியளித்த சிவபெருமான் அம்மையே நீ விரும்பியபடி எமது உடலில் இடம் பெற திருவண்ணாமலையில் தவம் மேற்கொள்வாய் என்றார். பின் கார்த்திகை மாதம் இறுதியில் காட்சியளித்த பெருமான் தேவியே நீ யாருக்காக சோகமுற்று இத்தொல்லைகளுக்கு இலக்கானாயோ அந்த கந்தப் பெருமான் கொங்கு மண்டலத்தில் உள்ள கொடிமாடச் செங்குன்றின் மேல் கோயில் கொண்டு உள்ளான். அந்தக் குன்றம் தான் நாம் தங்குவதற்கு ஏற்ற இடமாகும். ஆகவே நீ அங்கு சென்று தவத்தினை மேற்கொள்வாய் என்றார். அதனைக் கேட்ட அன்னை தன் பிள்ளையாகிய வேலனைக் காணும் ஆசையாலும், சிவபெருமானின் உடலில் ஒரு கூராய் அமர வேண்டும் என்ற விருப்பாலும் திருவண்ணாமலையிலிருந்து நாகாசலம் எனப்படும் திருக்கொடி மாடச் செங்குன்றூர் வந்து அடைந்தார். அன்னை பராசக்தி நாகசலத்தில் முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள இடத்திற்கு மேற்காகவும் இலுப்பை மரத்திற்கு கிழக்காகவும், அமைந்துள்ள தேவ தீர்த்தமே ஏற்ற இடமென்று கருதி அந்த தீர்த்தின் மேலுள்ள தாமரை மலரின் மேல் நின்று தன் தவமந்திரமாகிய பஞ்சசலத்தை உச்சரித்துக்கொண்டு பல காலம் கடும் தவம் புரிந்தார். தவத்தின் இறுதியில் சிவபெருமான் தோன்றி சிவமில்லையேல் சக்தியில்லை, சக்தியில்லையேல் சிவமில்லை என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தும் வகையில் தனது உடலில் இடது பாகத்தை தேவிக்காக தியாகம் செய்து. அப்பகுதியில் அம்மையின் உடலில் ஒரு பாகத்தை இடம் பெறச்செய்தார். முருகப்பெருமான்
திருக்கயிலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தினால் முருகப் பெருமான் கோபமுற்று கயிலையில் அம்மையப்பனை விட்டுப் பிரிந்து, காடு, மலை, வனம், வனாந்திரங்களைக் கடந்து திருவாவினன்குடி (பழநி) குன்றின் மேல் நின்றார். அங்கிருந்து கயிலை தன் கண்களுக்குத் தெரிந்ததால் அங்கிருந்து புறப்பட்டு கொங்கின் மீதுள்ள நாகாசலம் வந்தடைந்தார். நாகாசலத்திலிருந்து கயிலை தன் கண்களுக்குத் தெரியாததால் இந்த இடமே தான் தங்குவதற்கு ஏற்றதென்று எண்ணி திருச்செங்கோட்டில் செங்கோட்டு வேலவராக கோயில் கொண்டார் முருகப் பெருமான் என திருச்செங்கோடு தலபுராணம் குறிப்பிடுகிறது.இத்தலத்தில் முருகப்பெருமான் செங்கோட்செங்கோட்டுவேலவர் என்ற பெயருடன் வலதுகரத்தில் சக்தி வேலாயுதத்தையும் இடது கரத்தில் சேவலையும் எடுத்து இடுப்பில் அணைத்தபடி கம்பீர தோற்றத்துடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இந்த அரிய காட்சியுடன் முருபெருமானை உலகிலேயே இங்கு மட்டுமே காணமுடியும் என்பது மிகச்சிறப்பான ஒன்றாகும். அம்மையப்பன் வேண்டுகோளுக்கிணங்க, அம்மையப்பன் அருளிய வேலாயுதத்துடன் தேவர்களை துன்புறுத்திய அசுரன் தராகாசூரன் மற்றும் அவனது தம்பியுமாகிய சூரபன்மன் இருவரையும் செங்கோட்டு வேலவர் வென்று கொன்றார். மகா வல்லமை பெற்ற சூரபன்மன் பல வடிவங்களை எடுத்து வேலவனை வெல்ல நினைத்தான். ஆனால் வேலவன் சூரன் இறுதியாக எடுத்த மாமரத்தினை இரண்டாகப் பிளந்தான். தனது சக்தி வேலாயுதத்தால் அம்மரம் மீண்டும் பொருந்தாவண்ணம் அதனை கீழ்மேலாக மாற்றிப் போட்டான். அதனால் வேலவனின் வலிமையையும், தந்திரத்தையும் அறிந்த சூரன் வேலவா, இந்நாள் வரை நான் பற்றி இருந்த நான் என்ற அகந்தையை எனது அகத்திலிருந்து பிரித்து விட்டாய். அதனால் நான் உன்னிடம் கேட்கும் வரத்தினை கொடுத்து என்னைக் காத்தருளுவாய் என்று வேண்டினான். அதாவது எனது உடலாகிய இரு பிளவுகளில் ஒன்று உன்னைச் சுமக்கவும் மற்றொன்று உன் கொடியிலிருந்து கூவவும் விரும்பிகிறது என்றான். அதை ஏற்று வேலன் உன் உடல் பிரிவில் ஒன்று என்னைச் சுமக்கவும் மற்றொன்று என் கொடியிலிருந்து கூவட்டும் என்று அருள்பாலித்தார். மேற்கண்ட செய்திகள் மூலம் செங்கோட்டு வேலவனின் ஆயுதமாகிய சக்தி வேலாயுதம் வாகனமாகிய மயில் மற்றும் கொடியிலிருக்கும் சேவல் முதலியவை முருகன் திருச்செங்கோட்டிற்கு வந்த பிறகே அவருக்கு கிடைத்தது என்பது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஆதிகேசவபெருமாள்
நாராயண மூர்த்தி நரசிம்ம உருவில் அசுரன் இரணியனின் வயிற்றை பிளந்து அதிலிருந்து வழிந்த குருதியை குடித்ததால் ஏற்பட்ட பித்தத்தால் அலைந்து திரிந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதைக் கண்ட சிவபெருமான் சரப பட்சியாக உருவெடுத்து நரசிங்கத்தை கொத்தி தூக்கிக் கொண்டு அண்ட பகுதிக்கு பறந்து சென்று நரசிங்கத்தை குலுக்கினார். அதனால் பெருகிய குருதி வெளியே கொட்டியது. அதன் பின் நரசிங்கம் பெருமாளாக உருமாறியது. அதனால் திருமால் தனக்குண்டான பிரம்மஹத்தியை போக்கிக் கொள்ள கொடிமாட செங்குன்றூர் வந்து விஷ்ணு தீர்த்தமென்ற ஒரு சுனையை அமைத்து அதில் நீராடி தவம் செய்து ஆதி பரம்பொருளை வணங்கினார். அவ்வாறு தனது பிரம்மஹத்தி நீங்கிய பின் ஏகாந்த இடமாகவும், எழில் மிகுந்த இனிமை தரும் புனித பூமியாகவும் இருந்ததால் இப்பகுதியிலேயே கோயில் கொண்டார் என திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது.ஆதிகேசவபெருமாள் ஆலயம் கிழக்கு திசை வாயிலை உடையது. கற்சிலையால் வடிக்கப்பட்ட மூலவர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆதிகேசவபெருமாள் நீளாதேவி, பூதேவி என்ற தன் இரு சக்திகளையும் வடமும், இடமும் பெற்றுள்ளது. கண்கொள்ளாகாட்சியாகும். மூர்த்திக்கு எதிரில் பலிபீடமும் கருடாழ்வாரும் சொல்லின் செல்வனாகிய அனுமனின் திருவுருவமும் இருக்கிறது. வைகாசி மாதத்தில் நடைபெறும் விசாக தேர்திருவிழாவின் போது இப்பெருமானுக்கும் திருவிழா நடைபெறும். அர்த்தபாகத்திற்கு கொடியேற்றம் செய்த நான்காம் நாள் இப்பெருமானுக்கு கொடியேற்றம் நடைபெறும். அதன்பிறகு தான் அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளுவார் அப்போது அவருடன் சேர்ந்து ஆதிகேசவ பெருமானும் நகர் நோக்கி வருவார். பின் ஆதிகேசவபெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதி வழியாக ஊர்வலம் நடைபெறும். பூஜைகள்
இறைவன் அர்த்தநாரீஸ்வரருக்கு காலை பூஜை (காலை 6-7மணி வரை) உச்சி காலம் (12-1 மணி வரை) மாலை பூஜை (4-5 மணி வரை) நடைபெற்று வருகின்றது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் திறந்திருக்கும். பார்வதி தேவியால் பூஜிக்கப்பட்டு இன்றும் கோயிலில் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஆத்மார்த்த மரகதலிங்கத்திற்கு முதலில் அதிகாலையில் பாலாபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பிறகு வரிசையாக எண்ணைக் காப்பு, பால், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, தேன், மலர்கள் போன்ற பொருட்களைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் முடிந்தவுடன் இறைவனை பட்டினாலும், பல வகை மலர்களாலும் அலங்காரம் செய்வர். அழகிய மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட இறைவனுக்கு முதலில் மூலமந்திரங்களில் வடமொழியில் அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இதனை ஆவாகனம் என்று அழைக்கப்படுகிறது. பிறகு இறைவனுக்கு வெறும் அன்னம், பாயச அன்னம், எள் அன்னம், பயறு அன்னம், சக்கரை அன்னம் போன்ற அன்னங்களை வைத்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. கோபுரம்
திருமலையில் வடக்குப் பார்த்த வண்ணம் கம்பீர தோற்றத்துடன் உள்ள இராஜ கோபுரத்திற்கு கருங்கல்லால் ஆன அடித்தளம் கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சிப் பொறுப்பை கவனித்து வந்த திரியம்பக உடையார் என்பவரால் கி.பி. 1521-ல் அமைக்கப்பட்டது. அதன் பிறகு 29 ஆண்டுகளுக்குப் பிறகு சதாசிவராயரின் ஆட்சியில் நரசிங்கராமாச்சி என்பவரால் கிபி 1550ல் இக்கோபுரத்தின் மேல் பகுதி செங்கற் பணிகள் முடிக்கப்பட்டு குளிகையும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு குமாரமங்கலம் நாகமலை கவுண்டரின் குமாரர் சடையப்ப கவுண்டர் என்பவர் மக்களின் பொருளுதவியுடன் இக்கோபுர திருப்பணிகளை செய்து முடித்தார். மேற்கண்ட செய்திகள் திருச்செங்கோட்டு திருப்பணி மாலை கல்வெட்டின் மூலமாக அறியப்படுகிறது. இக்கோபுரம் 475 ஆண்டுகள் பழமையானது. இக்கோபுரத்தில் செய்யப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் நமது முன்னோர்களின் சிற்ப கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கோபுரம் 84.5 அடி (18.21 மீட்டர்) உயரமுடையதாய் ஐந்து நிலைகளுடன் மிக கம்பீரமாய் காட்சியளிப்பது இதன் தனிச்சிறப்பாகும்.திருவிழாக்கள்
ஆண்டின் வைகாசி மாதத்தில் தொடர்ந்து 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை விழாக்கள் நடைபெறுவது உண்டு. இதை பிரமோற்சவம், மஹாத்ஷவம் என்றும் கூறலாம். இதே போல் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் படிவழியாகவும், மலைப்பாதை வழியாகவும் சென்று அம்மையப்பனை தரிசிக்கின்றனர். திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் முதன் முதலில் மலை மேல் உள்ள அம்மையப்பனை வழிபட்டு அதன் பின்னரே தங்களது இல்வாழ்க்கையை துவங்குவது பாரம்பரியமாக கருதப்படுகிறது.திருக்கொடிமாட செங்குன்றூர் எனப் போற்றப்படும் இங்கு மாதந்தோறும் கீழ்க்கண்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. சித்திரையில் சித்திரா பௌர்ணமி, வைகாசியில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா, பத்திரகாளியம்மன் திருவிழா. ஆனியில் நடராஜர் திருமஞ்சனம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மலைக்கோயில் கௌரி விரதம், நவராத்திரி விரதம், ஐப்பசியில் பெரிய மாரியம்மன் திருவிழா, கார்த்திகையில் திருமலையில் கார்த்திகை தீபம். மார்கழியில் ஆருத்ரா தரிசனம், தையில் திருமலை படித் திருவிழா, மாசியில் மாசி மகம், சிவராத்திரி திருவிழா, பங்குனியில் உத்திர விழா. படித்திருவிழா 1963 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது. இறைபணி மன்றங்கள், சபைகள், சங்கங்கள், பஜனை குழுக்கள், கோஷ்டிகள், பஜனை மடங்கள் என மொத்தம் 92 குழுக்கள் சேர்ந்து இத்திருவிழாவை ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடத்தி வருகின்றனர். இத்திருவிழாவின் போது மலையின் மீது ஏறிச்செல்ல அமைக்கப்பட்டுள்ள மலையின் முதல்படியிலிருந்து பூஜையை தொடங்கி ஒவ்வொரு படியாக மேலேறிச்சென்று 60-ம் படியில் சிறப்பு பூஜைகளை செய்து மேலே திருக்கோயில் வாயில் வரை ஏறிச்சென்று பூஜையை நிறைவு செய்வார்கள். கேதார கெளரி விரதம்
சிவபெருமான் தன் பாகத்தின் பாதியை அம்மைக்கு வழங்கிய நிகழ்ச்சி ஆவணி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் தொடங்கி புரட்டாசி கிருஷ்ணபட்ச தேய்பிறையில் சதுர்த்தியில் கேதார கௌரி விரத விழாவாக இன்றும் இம்மலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது பெண்கள் தன் கணவரின் நலன் வேண்டி சக்தியை (பார்வதி தேவியை) குறித்து 21 நாட்கள் விரதமிருப்பர்.ஆதிநாகேஸ்வரர் பூஜை
அருள்மிகு நாகேஸ்வரர் வழிபாட்டு குழுவினரால் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ராகுகாலம் 4-30 மணி முதல் 6-00 மணி வரை சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் மற்றும் விளக்கு பூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நாகாச்சலம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் நடைபெறுகின்ற இப்பூஜையில் கலந்து கொள்ளும், நாகசர்ப்ப தோஷம் மற்றும் பிற தோஷங்கள் உள்ள திருமணமாகாத பெண்கள், ஆண்களுக்கு திருமணம் நல்ல முறையில் அமையும் என்று மக்களால் நம்பப்படுகிறது.வைகாசி விசாகம்
பிரதி வருடம் வைகாசி மாதம் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவானது திருச்செங்கோடு மாநாகரம் முழுவதும் 14 நாட்களுக்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்திருவிழாவின் போது இறைவனின் தரிசனத்தை காண ஏழுகரைநாட்டு மக்களும் திருச்செங்கோட்டில் கூடியிருப்பார்கள். பிருங்கி முனிவரின் சாபத்தால் புலி வடிவம் பெற்றிருந்த சயங்கலம் என்ற நகரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன் சிங்கவர்மன் தன் சாபவிமோசனத்திற்காக திருச்செங்கோடு வந்து நாகமலையை மூன்று முறை கிரிவலம் வந்து இறைவனை வணங்கி சுய உருவை பெற்றார். அந்நாளில் அப்புலி தங்கிய குகையை மக்கள் அன்று கூட்டுப்புலி குகை என்று கூறினர். இந்நாளில் அந்த இடத்தை கூட்டப்புலி என்றும் கூட்டப்பள்ளி என்றும் மக்கள் கூறுகின்றனர். இதனை போற்றும் வகையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் மன்னன் தன் நாடு சென்று ஏராளமான செல்வங்களுடன் திருக்கொடி மாடசெங்குன்றூர் வந்து இறைவனுக்கு பல திருப்பணிகளை செயது பின் சிறப்புமிகு தேர்திருவிழாவினையும் கொண்டாடினார் என்று அறியப்படுகிறது. இத்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடைபெறும் அதாவது ஆலயத்திலுள்ள மூலவமூர்த்தியின் வாகனம் எதுவோ அதன் உருவத்தினை துணிக்கொடியில் வரைந்து பூஜைகள் செயது பின்னர் கொடிமரத்தின் உச்சியில் ஏற்றுவர். இத்தகு நிகழ்ச்சியில் நமது மலைக்கோயில் மிகவும் சிறப்புவாய்ந்தது ஏனெனில் எல்லா கோயில்களிலும் கொடிமரம் ஒன்று மட்டுமே அமைந்திருக்கும்.ஆனால் இங்கு மூன்று கொடி மரம் அமைந்து ஆலயத்தை சிறப்பு செயகின்றன. வைகாசி திருவிழாவின் 14 நாட்கள் நிகழ்ச்சிகள்
1 ஆம் நாள் திருவிழா - காலையில் சுவாமிக்கு கொடியேற்றம் நடைபெறும் அதன் பிறகு மண்டபக்கட்டளைகள் நடைபெறும்2, 3-ஆம் நாள் திருவிழா - மலைமேல் உள்ள மண்டபத்தில் மும்மூர்த்திகளுக்கும் மண்டபக்கட்டளை நடைபெறும் 4 ஆம் நாள் திருவிழா - காலை ஆதிகேசவ பெருமானுக்கு கொடியேற்றம் நடைபெறும். பிறகு அன்று இரவு சுவாமிகள் மலைமேலிருந்து புறப்பட்டது. மலை கீழ் வந்து வண்ண வாணவேடிக்கையுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நான்கு வீதிகளின் வழியாக வலம் வரும் இத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது 5, 6, 7, 8 ஆம் நாள் திருவிழா - இத்திருவிழாவின் போது சுவாமிகளுக்கு திருச்செங்கோட்டை சுற்றி உள்ள ஊர்மக்களின் சார்பாக சிறப்பான பூஜைகள் மற்றும் கட்டளைகள் நடைபெறும் 9 ஆம் நாள் திருவிழா - காலை 9-00 மணிக்கு மேல் அர்த்தநாரீஸ்வரர், விநாயகர், செங்கோட்டு வேலவர் திருதேரில் எழுந்தருளல். அன்று விநாயகர், செங்கோட்டு வேலவர் திருதேர் வடம்பிடித்தல் நடைபெறும் 10 ஆம் நாள் திருவிழா - ஆதிகேசவ பெருமான் திருதேரில் எழுந்தருளல்.அர்த்தநாரீஸ்வரர் திருதேர் வடம் பிடித்தல் 11 ஆம் நாள் திருவிழா - அர்த்தநாரீஸ்வரர் திருதேர் இழுத்தல் மிகச் சிறப்பாக நடைபெறும் 12 ஆம் நாள் திருவிழா - அர்த்தநாரீஸ்வரர் திருதேர் நிலைநிறுத்தம் மாலை ஆதிகேசவ பெருமான் திருதேர் இழுத்தல், நிலை சேர்த்தல் மிகச் சிறப்பாக நடைபெறும் 13 ஆம் நாள் திருவிழா - சுவாமிக்கு மண்டபக்கட்டளையும் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறும் 14 ஆம் நாள் திருவிழா - திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியாக நடைபெறும் திருவிழாவாவின் போது சுவாமிகள் 14-ம் நாள் அதிகாலை இருள்பிரியும் நேரத்தில் தன் பரிவாரங்களுடன் மிகச்சிறப்பான வாண வேடிக்கையுடன் திருமலைக்கு மீண்டும் செல்லுவார் திருப்பணிகள்
கிபி 1509 முதல் 1565 வரை விஜயநகர பேரரசு கிருஷ்ண தேவராயர் ஆட்சிகாலத்தில் அவர் சார்பாக இங்கு ஆட்சி செய்து வந்தவர்களின் தலைமையின் பல திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.கிபி 1550-ல் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த நரசிங்க ராமாஞ்சி என்பவரால் திருமலையில் வடகோபுரமாகிய ராஜகோபுரத்தை செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து மூலம் செயயப்பட்டது. கயிலாயநாதர் கோயில் முன் நிறுவப்பட்டுள்ள 60 அடி கம்பமும் இவர் காலத்தில் தான் நிறுவப்பட்டது. கிபி 1608-ல் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த மாரிராஜந்திர மகிபன் என்பவரால் ஆதிகேச பெருமாள் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. இது நடைபெற்று சுமார் 400 ஆண்டுகளாகிறது. இவரின் காலத்தில் தான் கிபி 1617-ல் கையிலாயநாதர் ஆலயத்தின் முன் கோபுரம் பூர்த்தி செய்யப்பட்டது. இன்றைக்கு சுமார் 390 ஆண்டுகளாகிறது. கையிலாயநாதர் ஆலயத்தின் கோபுரவேலை முடிந்து சுமார் 62 ஆண்டுகளுக்கு பிறகு கிபி 1679-ல் சங்ககிரி ஆட்சி பீடத்தில் இருந்த தேவராசேந்திர ரகுபதி என்பவரால் கையிலாயநாதர் ஆலயத்தின் வாயிற் நிலைக்கதவு செய்யப்பட்டது. கிபி 1599ல் மோரூர் கண்ணங்குலம் வேலபூபதி சந்ததி வெற்றி குமாரசாமி என்பவரால் அர்த்தநாரீஸ்வரரின் கிழக்கே உள்ள நந்தி, பலிபீடம் முதலியன நிறுவப்பட்டது. கிபி 1588-ல் மதுரையை ஆண்ட விசுவநாத சொக்கலிங்க நாயக்கர் ஆட்சியில் திருக்கோயிலுக்கு நில தானம் செயயபபட்டதாக சுப்பரமணி சுவாமி கோவிலுக்கு வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிபி 1522-ல் கிருஷ்ணதேவராயர் காலத்தில் சோழமண்டலத்தை சேர்ந்த திரியம்பக உடையார் அர்த்தநாரீஸ்வருக்கு திருவிழா நடத்துவதற்கு நகரின் பல வரிகளை தானமாக கொடுத்ததாக அரியப்படுகிறது. 1619-ல் இம்முடி நல்லதம்பி காங்கேயன் செங்கோட்டுவேலவர் மண்டபத்தையும், அர்த்தநாரீஸ்வரர் மண்டபத்தையும் கட்டினார். சிற்ப கலைகள்
இங்குள்ள கற்சிலைகளும், சிற்பங்களும் பெரும்பாலும் சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தில் அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. இக்கோயிலில் அமைந்துள்ள மண்டபங்களிலும், தூண்களிலும் வடிக்கப்பட்டுள்ள அழகிய சிற்ப வேலைப்பாடுகளும் மற்றும் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள அற்புதமான கற்சிலைகளும் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மேலும் இக்கோயில் சிறந்த சிற்பக்கலைக்கு ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.செங்கோட்டு வேலவர் சன்னதியின் முன் உள்ள கல்தூண்களில் சிவன் வேட்டுவனாகவும், பார்வதி வேட்டுவச்சியாகவும் காட்சியளிக்கின்றனர். அதே போல் விமானத்தில் (மேற்கூரையில்) எட்டு கிளிகள் எட்டு திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லினால் கண்கொள்ளா காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும் வகையில் மிகவும் அழகிய கலைநுட்பத்துடனும் மிகுந்த அறிவுத்திறனுடனும் அமைக்கப்பட்டுள்ளது. குறவர் நடனகலையும், சிலந்தியை தேள் கவ்வுவது போல் அமைந்துள்ள சிலை வடிவத்தையும் கலைக்கண்ணோட்டத்தோடு நோக்கின் அதன் பெருமையை அறியலாம். வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும். அர்த்தநாரீஸ்வரர் நேரெதிர் உள்ள நிறுத்த மண்டபத்தில் உள்ள தூண்களில் காளி, ரதிமன்மதன், போன்ற சிற்ப்பங்கள் மிகவும் கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ளன. இம்மண்டபத்தை சபா மண்டபம் என்று கூறுவர். சிலப்பதிகார உரையாசிரியார் அடியாருக்கு நல்லாரை சிறப்பித்த இடம் இவ்விடம் என்று கூறுவர். இப்பகுதியில் ஆமை மண்டபம் என்று அழைக்கப்படும் சிறிய மண்டபம் ஒன்று உள்ளது. இதன் மேல்பகுதி மரத்தாலானது. வைகாசி விசாகத் திருவிழாவின் போது இறைவனை இம்மண்டபத்தில் எழுந்தருளச் செய்து வழிபாடு நடைபெறும். அப்போது இதன் மேல்பகுதியில் மலர்களைக் கொட்டி இயந்திரத்தின் மூலம் இயக்கினால் இதில் உள்ள துவாரத்தின் வழியாக ஒவ்வொரு பூவாக இறைவனின் மீது விழும். இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பானதாகக் கருதப்படும். வேலவன் முருகன் சன்னதிக்கு போகுமுன் வலதுபுறம் அருணகிரிநாதர் காட்சி தருகிறார். நரிகணபதி சன்னதியை ஒட்டி தென்புறத்தில் தாண்டவபத்திரை விலாச மண்டபம் அமைந்துள்ளது. ஊர்துவ தாண்டவ மூர்த்தியும் ஆலங்காட்டு காளியும் எதிரெதிரே இருந்து நடனமாடும் திருவுருங்கள் இங்கு கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆமை மண்டபத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட பல வடிவங்களை உடைய கற்சஙகலி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிறப்பம்சங்கள்
-ஆண்பாதி பெண்பாதியாய் அம்மையப்பன் உலகிலேயே இங்கு மட்டும் தான் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். -மாதொருபாகனின் திருமேனி முழுவதும் வெண்பாசானம் எனப்படும் அற்புத மூலிகைக் கலவையாகும். -உலகில் சிவபெருமான் 64 விதமான வடிவங்களை தாங்கியிருக்கிறார் . அவற்றில் 22வது வடிவம் இந்த அர்த்தநாரீஸ்வரமூர்த்தி வடிவமாகும். -அம்மையப்பனின் கருநிலைக் கூடத்தில் விலைமதிப்பற்ற ஆத்மார்த்த மரகதலிங்கம் இன்றும் பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது. -வேலவனைப் பாதுகாக்கும் இரு துவார பாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும். -ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாகத் தோற்றமளிக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு முக உருவ வழிபாடு இல்லை. -அம்மையப்பனின் திருவடியின் கீழ் அமைந்துள்ள தேவதீர்த்தம் எப்பொழுதும் வற்றாத தீர்த்தமாகும். -உலகிலேயே வேறு எங்கும் காணாத புதுமையாய் அர்த்தநாரீஸ்வரரின் அர்ச்சனையின் போது ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் அமைந்து அர்சிப்பது இத்திருக்கோயிலின் தனி சிறப்பு. -வேறு எங்கும் காணமுடியாத முக்கால் உடைய முனிவர் பிருங்கி மஹாரிஷியின் திருவுருவமானது அம்மையப்பனின் வலது பாதத்தின் அருகில் காணப்படும். -வேறு எந்த சிவதலங்களிலும் இல்லாதவாறு இங்கு அர்த்தநாரீஸ்வரர் சன்னதியில் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. -திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள செங்கோட்டுவேலவன் என்ற முருகப்பெருமானின் திருவுருவம் மிகவும் வித்தியாசமானது. அவர்தம் இடது கையில் சேவலை எடுத்து இடுப்பில் அணைத்தபடியும், அவர்தம் வலது கையில் வேலையும் பிடித்திருப்பது உலகிலேயே வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும். -அதே போல் முருகபெருமானின் வலது கையில் உள்ள வேலானது பெருமானின் தலையிலிருந்து சற்று உயரமாக இருக்கும். மற்ற அனைத்து முருகபெருமான் சன்னதியிலும் வேலானது சற்று தலையிலிருந்து உயரம் குறைவாகவே இருக்கும். செங்கோட்டுவேலவரின் இந்த அதிசிய வடிவம் உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும். -வேலவன் முருகன் சன்னதிக்கு போகுமுன் வலதுபுறம் அருணகிரிநாதர் காட்சி தருகிறார். -தமிழக அரசால் தொடங்கப்பட்ட அன்னதானதிட்டத்திற்கு தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக ஒரு ஆண்டிற்கு தேவையான நிதி நன்கொடையாக சேர்ந்தது இக்கோயிலிலே. -17-1-1964-ல் திருமலையில் கோடி அர்ச்சனை நடைபெற்றதாக திருச்செங்கோடு மான்மியம் மூலம் அறியப்படுகிறது. சுற்றுலா தகவல்கள்
இத்தலமானது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து சுமார் 370 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வசதியாக அனைத்து நேரங்களிலும் பேருந்துகள் இயங்குகின்றன. இத்திருத்தலம், நாமக்கல் மாவட்டத்திற்கு மேற்கே 40 கி.மீ. தொலைவிலும், கரூர் மாவட்டத்திற்கு வடக்கே 35 கி.மீ. தொலைவிலும், சேலம் மாவட்டத்திற்கு தெற்கே 45 கி.மீ. தொலைவிலும், ஈரோடு மாவட்டத்திற்கு கிழக்கே 20 கி.மீ. தொலைவிலும் உள்ள திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது. திருச்செங்கோட்டிற்கு மிக அருகில் ஈரோடு மற்றும் சேலம் இரயில் நிலையங்கள் உள்ளன. இங்கு வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கு ஏற்ப அனைத்து வசதிகளுடனும் கூடிய தங்கும் விடுதிகளும் உள்ளன. கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்
திருச்செங்கோட்டில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும் மற்றும் சில செப்பு பட்டயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் அதிகளவில் காணப்படுகிறது. இவைகளின் மூலமாகவே பெரும்பாலான திருமலையில் நடைபெற்ற திருப்பணிகள் மற்றும் திருக்கோயிலை பற்றிய செய்திகளை நாம் அறிகிறோம். விஜயநகர மன்னர்களின் ஆட்சிகாலத்தில் அவர்களது பிரதிநிதிகளாக செயல்பட்டவர்கள் மன்னரின் ஆனையை ஏற்று இப்பகுதியில் பெரும்பாலான நற்பணிகளை செய்துள்ளனர். அவர்களில் குறிப்பாக கிபி 16-ம் 17-ம் நூற்றாண்டில் திருச்செங்கோட்டுக்கு அருகே உளள மோரூரில் வசித்த வந்த கண்ணங்கூட்டத்தை சேர்ந்த திப்பராச உடையார், திரியம்பக உடையார் மற்றும் நரசிம்ம உடையார் அவர்களை பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. அதே போல் திருமலையில் அத்தப்ப நல்தம்பி காங்கேயன் மற்றும் இவரது மகன்களான அத்தப்ப இம்முடி காங்கேயன், குமாரசாமி காங்கேயன் ஆகியோரின் பெயர்களும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.தீர்த்தங்கள்
தென்னகத்திற்கு புண்ணியதலமாக சிறந்து விளங்கும் திருச்செங்கோடு மலையை சுற்றி 108-தீர்த்தங்கள் அமைந்திருந்தன ஆனால் இந்நாளில் இவற்றில் ஒரு சில மட்டுமே நம்மால் காண முடிகிறது. இத்தீர்த்தங்களில் மூழ்கினோர் முக்தி அடைவர் என்றும் நோய்கள் நீங்கும் என்றும் இன்னும் சில தீர்த்தங்களில் நீராடினால் (குமாரதீர்த்தம்) பிள்ளைபேறு பெறுவர் என்றும் மக்களால் நம்பப்படுகிறது. இவற்றுள் சில தீர்த்தங்கள் சிவபெருமானாலும் விநாயபெருமானாலும் முருகபெருமானாலும், தேவர்கள் மற்றும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதாக நம் நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்ற்றுள் சில முக்கிய தீர்த்தங்கள் கணபதி தீர்த்தம், தேவ தீர்த்தம், அம்மையப்ப தீர்த்தம், குமார தீர்த்தம், சிவ தீர்த்தம், சக்தி தீர்த்தம், பாவநாச தீர்த்தம், பைவர தீர்த்தம், நாக தீர்த்தம், சூரிய புஷ்கரணி, அல்லி சுனை, சித்தர் முலிகை தீர்த்தம் போன்றவையாகும். மேற்கண்டவற்றில் தேவ தீர்த்தம் (அம்மையப்பர் தீர்த்தம்) மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. இது மாதொருபாகனின் (அர்த்தநாரீஸ்வரர்) கருநிலை கூடத்தில் அவர் தம் திருவடி கீழ் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தை மற்றவர்கள் அணுக இயலாது. இத்தீர்த்தத்தை அர்த்தநாரீஸ்வரர் அர்ச்சகர்கள் மட்டுமே எடுத்து பக்தர்களுக்கு வழங்குவது இன்றும் உள்ளது. மற்றொரு சிறப்பு இத்தீர்த்தம் வற்றாத தீர்த்தமாக இன்றளவும் உள்ளது. கிரி வலம்
அர்த்தநாரீஸ்வரர் மலையாகிய திருச்செஙகோடு எனும் கிரியை வலம் வருவது திருச்செஙகோட்டு கிரிவலம் என்பர். இக்கிரி வலத்தை வடமொழியில் கிரிபிரதட்சணம் என்பர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிவ பக்தர்கள் தங்கல் குடும்பத்துடன் திருச்செங்கோட்டு மலையை சுற்றி கிரிவலம் வந்து தங்கள் பாவங்களை போக்கி நற்பயன் பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் போன்று திருச்செங்கோட்டு பெளர்ணமி கிரிவலத்திலும் ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரம் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். சித்ரா பெளர்ணமி முதலிய விஷேச காலங்களில் பக்தர்கள் இரவு 12 மணிவரை கிரிவலம் வந்து இறையருள் பெறுகின்றனர்.திருச்செங்கோட்டு கிரி ஓங்காரவடிவானது ஓங்காரம் சிவ வடிவமானது. எனவே கிரி என்பது சிவவடிவமானது என இதனால் புலப்படுகிறது. சிவ வலம் வந்து பெரும் பலன் அத்தனையும் நாககிரி வலம் வருதலால் கிட்டும் என்பதை மனப்பூர்வமாக அறியலாம் என்று பக்தர்கள் கூறுவர். நாககிரியை வலம் வருவது கர்ப்பகாலம் சிவனை பூஜை செய்ததால் கிட்டும் பலனை தரும். அது சமாதி நிலையில் இருந்து அடைகின்ற மேலான பலனை தருக்றது. அது பூமியை வலம் வந்த பலன் கிட்டும் அது சிவலிங்க பிரதிஷ்டை ப லனையும் சிவபூஜை செய்த பலனையும் தருவதுடன் பெரிய சிவன் கோயிலை கட்டிய பலனையும் தரும். சிவ தலங்களை தரிசித்த பலனை தருவதுடன் இந்திர பதவி, மகேஸ்வர பதவி, சிவ பதவியும் தரும் அது சிறந்த கல்வியை தரும் நினைத்த காரியங்களை நடக்கவும் செய்யும். மனம், மெய்களை தூய்மை செய்து கொண்டு மகளிரை நினையாமலும், கலவாமலும் குரோத மாதமார்ச்சாரிய உணர்வில்லாமலும் கிரிவலம் வரவேண்டும். பெளர்ணமி நாளிலும், அமாவாசை நாளிலும் சிவராத்திரியிலும் பிறந்த (ஜன்ம) நட்சத்திரத்திலும் திருச்செங்கோட்டை வலமாக வருவது அளவற்ற நற்பலனை தரும். திருச்செஙகோட்டை வலம் வரும் பக்தர்கள் முதலில் மலையடிவாரம் செல்ல வேண்டு்ம் மலையேறுவதற்காக படிவழி தொடங்குமிடமே மலையடிவாரம் கிரிவலம் தொடங்கும் பக்தர்கள் முதலில் அவ்வடிவாரம் சென்று அங்குள்ள கஜமுக பிள்ளையாரை வணங்கி சுமார் 7 கிமீ உள்ள கிரிவல பாதையை சுற்றி வந்து அதே இடத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்திட வேண்டும். கிரிவலம் வந்து முடித்தவுடனே குளிக்கக் கூடாது. தூங்கக் கூடாது. அது கிரிவலப் பயனைப் போக்கிவிடும் என்று திருங்கோட்டு மான்மியம் சொல்கிறது. பாண்டுவின் புதல்வர்களான தருமன், பீமன், அர்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் 12 ஆண்டுகள் வனவாசமும் ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் (பிறர் காணாமல் வாழும் வாழ்வு) வாழ்ந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த நாட்களில் அவர்கள் பல புண்ணிய தலங்கள் மலைகள் தீர்த்தங்கள் முதலியவற்றை தரிசித்துக் கொண்டு வரும் போது திருச்செங்கோட்டு மலையைக் கண்டனர். அதன் மீது ஏறி கணபதி தீர்த்தம், குமார தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம் முதலியனவற்றில் நீராடி மகிழ்ந்தனர். புள்ளியன் சுனையில் படிந்திருந்த சக்கரம் அவர்கள் சத்ருக்களுடன் போரிடும் போது பேராபத்து காலத்தில் அவர்களின் உயிர்களை காத்து பகைவர்களைச் சாயச் செய்வதாகக் கூறியதாக அறியப்படுகிறது. அவர்கள் திருச்செங்கோடாம் திவ்யமலையிலுள்ள தீர்த்தங்களையெல்லாம் ஆடி உமையொரு பாகனையும், குமர கடவுளையும் துதித்து வந்தனர். அங்கு சனற்குமாரன் அகத்தியன், புலத்தியன், விஞ்ஞையர்கள், சித்தர்கள் முதலிய பெரியோர்கள் தவம் புரிந்தனர். அவர்கள் கிரிவலம் வந்த பாண்டவர்களை ஆதரித்தனர். பின்னர் முருகீசரை வணங்கினர். அஞ்ஞாத வாசம் முடிந்ததால் சொற்படி நாடு தராத கௌரவர்களை எதிர்த்து போரிட்டு உமையொருபாகர் அருளால் தம் திருநாடு எய்தி தாம் இழந்த அத்தினாபுரியையும் பெற்றனர் என்று திருச்செங்கோட்டு மான்மியம் சொல்கிறது. |