திருப்புல்லாணி அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில், இராமநாதபுரம்
புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய (திருப்புல்லாணி) காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். இவர்களின் தவத்தினால் அகம் மகிழ்ந்த பெருமாள் அரச மரமாக இவர்கள் முன்பு காட்சியளித்தார். அதைக் கண்டு மகரிஷிகள் மகிழ்ந்தாலும் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்டினர். உடனே மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார். குழந்தை பாக்கியத்திற்காக தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தி, யாககுண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயாசத்தைமனைவியருக்கு கொடுத்தார். அதை பருகிய தசரத பத்தினியருக்கு ராம சகோதரர்கள் பிறந்தனர். இதன் அடிப்படையில், அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்து அங்கு தரப்படும் நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கணவனும், மனைவியும் உபவாசகம் இருந்து ஜலக்கிரீடை செய்ய வேண்டும். பின்பு அன்றிரவு கோயிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து விட்டு, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். சீதையை மீட்க இலங்கை செல்லும் முன் ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இவ்வூருக்கும் திருப்புல்லாணி என்று பெயர் வந்தது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர். ராமர், இலங்கை செல்ல பாலம் அமைத்ததால் இத்தலம் மிகவும் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம். பூரி தலத்தில் பாதியளவே காட்சிதரும் ஜெகந்நாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் ‘தட்சிண ஜெகந்நாதம்’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மகாலட்சுமியை மடியில் இருத்தி காட்சி தரும் நரசிம்மர், இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். புராதனமான கோயில்களில் மட்டுமே காணக்கூடிய அமைப்பு இது. ஜெகந்நாதர் சன்னதி கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு சந்தன காப்பிட்டு வழிபடுகிறார்கள். ராமர், சீதையை மீட்க அருளும்படி ஜெகந்நாதரிடம் வேண்டினார். சுவாமி அவருக்கு ஒரு பாணம் கொடுத்தார். ராமன், அந்த பாணத்தை பிரயோகித்து ராவணனை அழித்தார். இதன் அடிப்படையில் எச்செயலையும் துவங்கும்முன்பு, ஜெகந்நாதரை வேண்டிக்கொண்டால் அது வெற்றி பெறும் என்கிறார்கள். இந்த சுவாமிக்கு, ‘வெற்றி பெருமாள்’ என்றும் பெயருண்டு. ராமர் வழிபட்டதால் இவர் ‘பெரிய பெருமாள்’ என்றும் பெயர் பெறுகிறார். இங்கிருக்கும் அரச மரம். மிகப் பழமையான இந்த அரச மரத்தை, போதி என்று பக்தியோடு அழைத்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். இதன் அருகில் இருக்கும் மேடையில் நாகப் பிரதிஷ்டை செய்து, மனதார வேண்டிக் கொண்டால் பிள்ளை இல்லாதவர்களுக்கு விரைவில் அந்தப் பாக்கியம் கிடைக்கும் என்பது இங்கே ஐதீகம். அரிச்சந்திர புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபம் கோயில் எதிரே உள்ளது.ராமனை உபசரித்த பரத்வாஜர், இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார். திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். தவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ளசேது பாலம் பற்றி பாடியுள்ளனர். திருவிழா: ஆதிஜெகந்நாதருக்கு பங்குனியிலும், ராமருக்கு சித்திரையிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. ஜெகந்நாதர் பங்குனி உத்திரத்தன்றும், சித்ராபவுர்ணமியன்று ராமபிரானும் தேரில் எழுந்தருளுவர். திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12.30 மணி வரை மாலை 3.30 மணி முதல் இரவு 8 .30 மணி வரை முகவரி: அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி - 623 532. ராமநாதபுரம் மாவட்டம். போன்: +91-4567- 254 527, 94866 94035 |
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|