தொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும் தரியன் தெருவோரச் சாக்கடையை சுத்தம் செய்து விட்டு வெளியே வரவும், வெற்றிச் சங்கு என்ற தொலைக்காட்சி சேனலின் நிருபர் தனது காமிராக்காரரோடு அங்கே வரவும் சரியாக இருந்தது. உடம்பெல்லாம் சாக்கடையின் கரிக்குழம்போடு, உலகின் எல்லாவித நாற்ற வாசனைகளோடு அந்த தொழிலாளி தன் முன் தோன்றியதைப் பார்த்ததும் அந்த நிருபருக்கு சட்டென்று ஒரு ‘ஐடியா’ உதித்தது. ‘இன்றைய ‘டாபிக்’கைப் பற்றி இந்தத் துப்புரவுத் தொழிலாளியிடம் கேட்டால் என்ன? மெத்தப் படித்தவர்களிடமும், நடிகர்களிடமும் அரசியல் வாதிகளிடமும் கேட்டாயிற்று; தெருவில் நிற்கும் ஒரு கடை நிலை ஊழியரிடமும் கேட்டால் வித்தியாசமான தகவல் வருமோ?’
தரியனுக்கு வீட்டுக்குப் போகும் அவசரம். பசி குடலைப் பிடுங்கியது. போய்க் குளித்துவிட்டு இருக்கிறதைச் சாப்பிட்டு விட்டு, அரை மணி உறங்கணும். அப்புறம் கடன் வாங்கப் போகணும். “ஐயா! நாங்கள் பத்திரிகைக் காரர்கள். வெற்றிச்சங்கு டீவி பற்றி உங்களுக்குத் தெரியுமா?” “உங்களுக்கு இன்னா வேணுங்க?” என்றான் தரியன். எவ்வளவு அவசரமாக இருந்தாலும், நம்மையும் மதித்து இந்தப் படித்த மனிதர்கள் பேசுகிறார்களே என்ற வியப்பு அவன் மனதில் ஓடியதால் மரியாதை கலந்த குரலிலேயே அவன் இப்படி வினவினான். “உங்க பேரு என்னான்னும், உங்க தொழில் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க...” “இந்த ஊரு முனிசிபாலிட்டிலே வேல செய்யறேன். பேரு தரியன்.” “பேரே தரியன் தானா, இல்லே சுருக்கி சொல்றீங்களா?” “தரியன் தாங்க.” அவனுக்கு பேச்சை வளர்ப்பதில் இஷ்டமில்லை போலும். “என்னப் பாத்தா தெரியலையா? சாக்கடைய சுத்தம் பண்ற வேல. ஊர் முட்ட அசிங்கம்லாம் என் கையிலெயும் பாடியிலயும் தான்” என்று அவன் சற்றே தன் கையை நீட்டவும், பத்திரிக்கைக் காரர்கள் ஓரடி பின் வாங்கினார்கள். “இன்னும் கொஞ்சம் உங்களைப் பத்தி, உங்க குடும்பத்தைப் பத்தி சொல்லுங்க...” ***** என்னத்தைச் சொல்வான் தரியன்? அவன் பிறந்தது தோட்டி குலம். முன்னெல்லாம் மலம் சுமந்திருக்கிறான். இரண்டு வருஷத்துக்கு முன்னால் பிரமோஷன் கிடைத்து சாக்கடை சுத்தம் செய்யும் உயர் தொழில் செய்கிறான். எல்லாம் அதே சரக்கு தான் இங்கேயும்! முனிசிபாலிட்டியில் பணம் இல்லை. நாலு மாசமாக சம்பளம் பாக்கி. அட்வான்ஸ் என்று பெயரிட்டு ஏதோ கொஞ்சம் கொடுத்ததனால் அரை வேளை சாப்பாடாவது உண்ண முடிகிறது. அந்த ஊர் எம்.எல்.ஏ.வுக்கு விழா எடுத்ததில் முனிசிபாலிட்டி கஜானா காலி. அவன் மனைவிக்குத் தீராத குடல் புண். தரியனுக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் உணவிட்டு என்ன மீந்திருக்கும், என்ன சாப்பிட்டிருப்பாள்? பெரியாஸ்பபத்திரியில் உடனே இடம் இல்லை. அங்கே நிலைமை ரொம்ப மோசம். கீழே தரையிலும் கக்கூசுக்கு அருகிலும் கூட நோயாளிகள் கிடத்தப் பட்டிருந்தார்கள். பிரைவேட் காரர்கள் நடத்தும் தரும ஆஸ்பத்திரியில் இலவசமாக மருத்துவம் பார்க்கிறார்கள். ஆனால் சில ஸ்பெஷல் மருந்து வெளியில் கைப்பணம் போட்டுத் தான் வாங்க வேண்டும். இரண்டாயிரத்து சொச்சம் வேண்டும். சீக்கிரம் வாங்காவிட்டால் அவன் மனைவியின் உயிருக்கே ஆபத்து. தரியனிடம் காசே இல்லை. தெரிந்தவர்களும் கை விரித்து விட்டார்கள். அவன் மனைவியோ, “நா போனப்பாடு எப்பிடிப் பாத்துப்பே பிள்ளிங்களே?” என்று கவலைப்பட ஆரம்பித்து விட்டாள். அவளையே ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. மகன் பெரியவன்; படித்துக் கொண்டிருக்கிறான். மகளை படித்தது போதும் என்று நிறுத்தி விட்டான். பொட்ட பிள்ள தானே? தகப்பன் வெளியில் செய்யும் பணியை அந்தச் சிறுமி தாய்க்கு வீட்டில் செய்துக் கொண்டிருந்தாள். அத்தோடு முடியவில்லை தரியனின் கவலைகள். மகன் நன்றாகப் படித்தான். பன்னிரண்டாவது வகுப்பு வரையில் எல்லாம் இலவசம். நல்ல ரேங்க் வாங்கி பாஸ் செய்தான். அவன் பள்ளி ஆசிரியர் ஒருவர், ஜாதிச் சான்றிதழ் எல்லாம் வாங்கிக் கொடுத்து, என்ஜினீரிங் கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்து விட்டார். ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தது. “தரியா, இவனெப் படிக்க விடுங்க. ரொம்ப புத்திசாலி, மூளை இருக்குது. மேலே மேலெ போவான் பாருங்க” என்றார் அந்த ஆசிரியர். “இதெல்லாம் நமக்கு ஆவாது சார். ஏதாவது வேலக்கிப் போயி சம்பாதிக்கட்டும்” என்ற தரியனின் சொல் கேட்டு மகன் அழுதுவிட்டான். ஆவது ஆகட்டும் என்று தரியனும் சரி என்றான். இப்போது கல்லூரியில் ‘என்னவோ சொன்னார்களே, இதெல்லாம் நமக்கு இன்னா புரியுது?’ அதற்காக முப்பதாயிரம் உடனே கட்டவேண்டுமாம். கட்டாவிட்டால் படிப்பு தடைப் படும். தரியன் இடிந்து, நிலை குலைந்து, ‘சே, முன்னப்போல மலம் தூக்கியே பொழச்சிருக்கலாம்; ரெண்டு வேளை துன்னுட்டு, எல்லாரையும் போல க்வாட்டர் அடிச்சிப் படுத்துட்டா போறும்; நாம இதுக்கெல்லாம் ஆசப் படவா இந்த கொலத்திலே பொறந்தோம்?’ என்று தன் இயலாமையை எண்ணி மறுகிக்கொண்டிருந்தான். ***** பல விதமான உணர்ச்சிகள் தரியனின் முகத்தில் அரைக் கணத்தில் நர்த்தனம் புரிந்து மறைந்தன. “இன்னா சொல்றது சார்?” “உங்களுக்கு விஷயம் தெரியுமில்லியா? பேப்பர் படிப்பீங்களா?” தரியன் நாலாவது வரைக்கும் படித்தவன். மேற் சொன்ன விஷயத்தைப் பற்றி அவனுக்குக் கொஞ்சம் தெரியும். தன் உடம்புக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த அமிலங்கள் எல்லாம் தொண்டைக் குழியில் கட்டியாகச் சேர்ந்து அடைப்பதைப் போல் உணர்ந்தான் தரியன். மெல்ல மிடறு விழுங்கினான். தொண்டையில் இன்னும் காரம் இருந்தது. அது அவன் நெஞ்சை எரித்தது. காறித்துப்பினான். புகைப்படக்காரருக்கு என்னமோ போல் இருந்தது. “வளந்தாங்கி முனிசிபாலிட்டிலே நான் குப்ப பொறுக்கி, சாக்கட கிளீன் பண்றவன். டெல்லி எங்க சார் இருக்குது? இந்த ஊரு தான் எனக்கு நாடு காடு எல்லாமே; மெட்ராசே பாத்ததில்லே. பத்து வரவெல்லாம் கடக்கார பாய்க்குத்தான் தெரியும்...” “பத்து இல்லே, நாட்டுப் பற்று..” என்று நிருபர் சொல்லவும் “தேச பக்தி” என்று காமிராக்காரர் தெளிவுரை கொடுத்தார். “தெரியும் சார். நானும் கொஞ்சம் படிச்சேன். இன்னாவோ காஷ்மீராம், பாகிஸ்தானாம், நாட்ட வெட்டிபுடுவாங்களாம்... படிச்சேன். இந்த நாடும் என்ன பத்திக் கவலப் படலெ; நானும் நாட்டப் பத்தி நெனச்சு எண்ன பண்ணப் போறேன்னு வயிறு எரியுது சார். என் கஸ்டம் எல்லாம் உங்க கிட்டே சொல்லி அழ டயம் இல்ல சார்” என்று தரியன் பேசவும், நிருபருக்கு நல்லதொரு கதை - மனித உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடான கதை - கிடைத்த சந்தோஷம். தரியன் காட்டிய முக உணர்ச்சிகளைப் படம் பிடிப்பதில் தீவிரமானார் காமிராக்காரர். மனிதர்கள் அவர்களது தொழிலுக்கு உபயோகப்படும் இயந்திரங்கள்! தரியன் தொடர்ந்தான். “ஆனா ஒண்ணு மட்டும் தோணுது சார். படிக்கப் போன பிள்ளீங்க எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்; தப்பில்லே; காந்தி மகானும் அண்ணாவோ கூட காலேஜ் பிள்ளிங்களே அரசியலுக்குக் கூப்டாங்க இல்லியா? ஆனா, இன்னாவொண்ணா பேச கூடாது; அதுவும் நாட்டப் பத்தி; அம்மா மாதிரி இல்லே நாடு? அம்மா ஒண்ணும் செய்யாட்டா கூட - என்னெ மாதிரி கோடிப் பேரு இப்டி தான்; இருந்தமா செத்தமா, எவன் கேட்டான், நாடாவது இன்னுண்ணாவது, தப்பா சொல்லிடுவேன் எரியுது - ஆனா அத வுடுங்க; மின்னிக்கி இப்போ எவ்ளொ பரவால்லே, ஆனாலும்... சரி என் பாடு வுடுங்க, பிள்ளிங்க பெரீ பேச்சல்லாம் பேசாம கம்னு படிப்பு உண்டு தான் உண்டு - இன்னா, காலேஜ்குள்ளே வெவகாரம்னா அது வேற. அப்ப ஸ்ட்ரைக் பண்ணா, சத்தம் போட்டா அது வேற...” என்று சொல்லிக் கொண்டேவந்தவன், “போறும் சார், நான் ஊட்டுக்கு போணொம். ஊட்டுக்காரி சீக்காளி. நான் போறேன் சார்” என்று நடையைக் கட்டினான். வெற்றிச்சங்கு தொலைக்காட்சியின் நிருபருக்கும் காமிராக்காரருக்கும் ஏதோ புரிந்தது போலவும் இருந்தது; ஏதோ புரியாதது போலவும் இருந்தது. “சரி, எடிட்டர் என்ன சொல்றார்னு பாக்கலாம்” என்று சொல்லிக் கொண்டு அவர்கள் கிளம்பினார்கள். |
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|