தமிழ் அறிஞர் ஔவை நடராஜன் காலமானார் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 21 2022, 21:30 [IST] திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தமிழறிஞர் ஒளவை துரைசாமி- லோகாம்பாள் ஆகியோருக்கு மகனாக 1936-ம் ஆண்டு பிறந்தவர் ஔவை நடராஜன். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் ஆய்வுகள் மூலம் முனைவர் பட்டம் பெற்றார். 1975-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநராக பணியாற்றினார். 1984-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை செயலாளராக பணியாற்றினார். ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமல் அரசு துறை செயலராக முதன் முதலில் நியமிக்கப்பட்டவர் ஔவை நடராஜன். 1992-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார் 2014-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். 2015-ம் ஆண்டு முதல் சென்னை பாரத் பல்கலைக் கழகத்தின் வேந்தராக பதவி வகித்தார். சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த ஔவை நடராஜன், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|