குடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 15, 2019, 07:00 [IST] பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக குடியுரிமை திருத்த சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் இயற்றி உள்ளது. இந்த சட்டத்தால் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநிலங்களில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டம் மேற்கு வங்காளத்திலும் பரவியது. ஹவுராவின் தோம்ஜூர் பகுதியில் உள்ள சங்ரயில் ரெயில் நிலையத்தில் புகுந்த ஒரு கும்பல், அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த வீரர்களை தாக்கிவிட்டு ரெயில் நிலையத்துக்கு தீ வைத்தனர். இதனால் அருகில் உள்ள சில கடைகளும் தீயில் எரிந்து நாசமாயின. இதைப்போல உலுபேரியா ரெயில் நிலையம், முர்ஷிதாபாத்தின் நிமித்தா ரெயில் நிலையங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கிருஷ்ணாபூர் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 4 ரெயில்களை தீ வைத்து எரித்தனர். இதைப்போல உலுபேரியா ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். மாநிலம் முழுவதும் பல இடங்களில் ரெயில் மறியல் போராட்டங்கள் நடந்ததால் ரெயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் 30-க்கும் மேற்பட்ட நீண்டதூர ரெயில்கள் மற்றும் புறநகர் ரெயில்கள் என ஏராளமான ரெயில்களை கிழக்கு ரெயில்வே ரத்து செய்தது. மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வரும் நிலையில், மக்களை அமைதி காக்குமாறு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்து உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என்றும் மம்தா பானர்ஜி உறுதியளித்து உள்ளார். இதற்கிடையே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அசாமில் நேற்றும் போராட்டங்கள் நடந்தன. எனினும் சில இடங்களில் போராட்டங்கள் ஓய்ந்து நிலைமை மேம்பட்டதால், தலைநகர் கவுகாத்தி, திப்ரூகர் உள்ளிட்ட இடங்களில் போடப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று பகலில் விலக்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவது என கூட்டு இயக்கம் அறிவித்து உள்ளதால் திரிபுராவில் நேற்று சற்று அமைதி திரும்பியது. எனினும் வடக்கு திரிபுராவின் கஞ்சன்பூர், கந்தர்கெரா போன்ற பகுதிகளில் தொடரும் போராட்டங்களால் பதற்றம் நிலவி வருகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|