ராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 1, 2019, 19:15 [IST] 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நெல்லை மாவட்டத்திலுள்ள ராதாபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தல் முடிவுகளில் இன்பதுரை 69590 வாக்குகளை பெற்றார். அப்பாவு 69541 வாக்குகளை பெற்றார். வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில், இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 203 தபால் ஓட்டுகளை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்ததை எதிர்த்த அப்பாவு, அந்த வாக்குகளை எண்ண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், இதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. இதையடுத்து இன்பதுரை வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அப்பாவு. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் வழக்கு நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 203 தபால் ஓட்டுக்களை எண்ண, வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 19, 20, 21 என்ற மூன்று சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கையில் தவறு நடந்ததாக முறையிடப்பட்டதையும் பரிசீலித்த நீதிமன்றம், இந்த மூன்று சுற்றுகளின் வாக்கு இந்திரங்களை வரும் 4ம் தேதிக்குள் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது. வாக்குகள் எவ்வளவு நேரத்தில் எண்ணி முடிக்கப்படும் என்று இன்றே தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வாக்குகள் எண்ணப்படும்பட்சத்தில் ஒருவேளை இன்பதுரையைவிட, அப்பாவு மொத்தத்தில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|