10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 31, 2019, 11:10 [IST] பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆலோசனை நடத்தினார். பொதுத் துறை வங்கி தலைவர்களை சந்தித்த பிறகு நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் 10 பொதுத்துறை வங்கிகளின் இணைப்பை அவர் அறிவித்தார். அதன்படி 4 பெரிய வங்கிகளுடன், 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இதன்மூலம் 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகள் ஆகின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இது நாட்டின் 2-வது பெரிய வங்கியாக அமையும். இதன் வர்த்தக அளவு ரூ.17 லட்சத்து 95 ஆயிரம் கோடியாக இருக்கும். மொத்தம் 11 ஆயிரத்து 437 கிளைகளை கொண்டிருக்கும். கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது. இது நாட்டின் 4-வது பெரிய வங்கியாக திகழும். இதன் வர்த்தக அளவு ரூ.15 லட்சத்து 20 ஆயிரம் கோடியாகும். 10 ஆயிரத்து 324 கிளைகளை கொண்டிருக்கும். யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன. இது நாட்டின் 5-வது பெரிய வங்கியாக இருக்கும். இதன் வர்த்தக அளவு ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக இருக்கும். 9,609 கிளைகளை பெற்றிருக்கும். இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. இது நாட்டின் 7-வது பெரிய வங்கியாக இருக்கும். இதன் வர்த்தக அளவு ரூ.8 லட்சத்து 8 ஆயிரம் கோடி ஆகும். இந்த இணைப்புக்குப் பிறகு நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆகிவிடும். அவை, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி ஆகும். பொதுத்துறை வங்கிகளின் வாரியத்துக்கு இனி தன்னாட்சி வழங்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|