மதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 30, 2019, 18:05 [IST] வீடியோ சென்னை: வெளி மாநில நீதிபதியை பார்வையாளராக நியமித்து மதுரை மக்களவை தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல். மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், ஏப்ரல் 20ம் தேதி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏப்ரல் 27ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் உதவி தேர்தல் அதிகாரி, மற்றும் உதவி ஆணையரை மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று (30-04-2019) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர் நடராஜன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தன்னுடைய விளக்கத்தை கேட்காமல் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதனால் அந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நடராஜன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில் தமக்கும் தேர்தல் பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை, தான் தேர்தல் பணியில் ஈடுபடவும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த இரண்டு மனுக்களையும் நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெளி மாநில நீதிபதியை பார்வையாளராக நியமித்து மதுரை மக்களவை தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து இவ்வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இவ்விவகாரத்தினால் மதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரி சுயேச்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|