திருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜனவரி 07, 2019, 06:45 [IST] திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் மறைவை ஒட்டி காலியான திருவாரூர் தொகுதிக்கு, வரும் ஜனவரி 28ஆம் நாள் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால் கஜா புயல் பாதித்த திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவது சரியல்ல என்றும், இதனை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூ., தேசிய செயலர் டி.ராஜா தேர்தல் கமிஷனில் மனு அளித்திருந்தார். இந்த மனு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சூழல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடை தேர்தல் பணிகள் நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் சூழ்நிலையில் திருவாரூர் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடைபெறுமா அல்லது அதற்கு பின்னர் தனியே நடைபெறுமா என்பது தெரியவில்லை.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|