ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 10, 2018, 18:10 [IST] பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதில் இருந்தே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான போக்கு காணப்படவில்லை. ரிசர்வ் வங்கியை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர், துணை ஆளுநர்கள் இருந்தபோதிலும், கூடுதலாக ரிசர்வ் வங்கி வாரியக்குழுவை மத்திய அரசு நியமித்தது. அந்த குழுவின் தலையீடு அதிகமாக இருந்ததால், ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையே உரசல் நீடித்து வந்தது. ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா மத்தியஅரசை கடுமையாக விமர்சித்தார். இந்த சூழலில் ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத்தொகை வழங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க இருக்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையைச் சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகின. இதனால் உரசல் ஏற்பட்டதாகவும், கடந்த மாதம் 19-ம் தேதி நடந்த வாரியக் கூட்டத்தில் உர்ஜித் படேல் ராஜினாமாவை அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்தன. பின்னர் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து வாரியக்கூட்டம் சுமூகமாக நடந்தது. இந்நிலையில் உர்ஜித் படேல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து உர்ஜித் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகுகிறேன். இது உடனடியாக அமலுக்கு வருகிறது’’ எனத் தெரிவித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அரசு கொடுத்த அழுத்தமே இதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் 24வது ஆளுநராக உர்ஜித் படேல், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|