எடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 12, 2018, 18:05 [IST] தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்றும், முதல்வர் பழனிசாமி மீதான திமுக புகாரின் ஆரம்பகட்ட விசாரணையிலேயே முகாந்திரம் இல்லை என்பதால் மேற்கொண்டு யாரிடமும் விசாரணை நடத்த தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நெடுஞ்சாலை துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் முதல்வரின் கட்டுப்பாட்டில்தானே உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பிய போது, லஞ்ச ஒழிப்பு துறையானது தன்னிச்சையாக செயல்படக்கூடிய அமைப்பு என்றும், இது உள்துறையின் கீழ் வராது என்றும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் கீழ் வருவதால் முதல்வருக்கோ, டிஜிபி-க்கோ தெரிவிக்க அவசியம் இல்லை என்றும், மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் தெரிவித்தால் போதும் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையரை யார் நியமிப்பது என்று கேள்வி எழுப்பியபோது, மூத்த கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை அரசு நியமிக்கும் என லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இன்று மீண்டும் வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். 3 மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் பழனிசாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. ஒரு வாரத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டு உள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|