நக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 9, 2018, 19:55 [IST] சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் இன்று காலை வைத்து கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124ன் கீழ் ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நக்கீரன் கோபால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் நக்கீரன் கோபாலை, சென்னை எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த நீதிபதி கோபிநாத், “நக்கீரன் கோபாலை இந்திய தண்டனைச் சட்டம் 124ன் கீழ் கைது செய்தது செல்லாது. இந்த சட்டப் பிரிவில் ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மேலும், ஆளுநர் தன்னுடைய புகாரில், கோபால் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரவில்லை. இத்தகைய வழக்குகளில் கைது செய்வது என்பது தவறான முன்னுதாரணமாகி விடும். எனவே கோபாலை நீதிமன்ற காவலின் கீழ் சிறைக்கு அனுப்புமாறு உத்தரவிட முடியாது” என தெரிவித்தார். விடுதலைக்குப் பின்னர் பேசிய நக்கீரன் கோபால், தனது விடுதலை மூலம் பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்திருக்கிறது என்றார். தனது விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். திருவல்லிக்கேணி மருத்துவயில் கோபாலை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் வந்து சந்தித்தார்கள். கோபாலை சந்திக்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்றத்தில் திருமாவளவனும், முத்தரசனும் சந்தித்தார்கள். இந்து என்.ராம் கோபால் மீது போடப்பட்ட 124 வது பிரிவை எதிர்த்து நீதிபதியிடம் அனுமதி பெற்று பேசினார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|