ஹெச்-4 விசாவை ரத்து செய்ய டிரம்ப் நடவடிக்கை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 23, 2018, 16:35 [IST] அமெரிக்காவில் ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு அந்நாட்டு அரசு ஹெச்-1 பி விசா வழங்கி வருகிறது. ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவி (அல்லது கணவன்) மற்றும் குழந்தைகளுக்கு ஹெச்-4 என்ற விசா அளிக்கப்படுகிறது. இந்த ஹெச்-4 விசாவைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைத் தொடங்கலாம், ஓட்டுநர் உரிமம் பெறலாம், குழந்தைகள் அமெரிக்கப் பள்ளிகளில் கல்வி பயிலலாம் . ஆனால் அமெரிக்காவில் எந்தப் பணியிலும் இவர்கள் சேர முடியாத நிலை இருந்தது. பணியில் சேரவேண்டுமென்றால் ஹெச்-1பி விசா தேவை. இல்லையேல் ஹெச்-1பி விசா வைத்திருக்கும் கணவன் அல்லது மனைவி , நிரந்தர வசிப்பிடத் தகுதி எனப்படும் ‘கிரீன் கார்டு’ உடையவராக இருந்தால் அவரது கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணிசெய்யும் உரிமையைப் பெறமுடியும். ஆனால் இந்த கிரீன் கார்டை பெறுவதென்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இதனைப் பெறுவதற்கு ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குமேல் கூட ஆகலாம். எனவே ஒபாமா அரசாங்கம் ஹெச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பில் (யுஎஸ்ஐஎஸ்) ஐ-765 என்ற படிவத்தை பூர்த்தி செய்து பணி அனுமதி அட்டையை பெற்றுக்கொண்டால் அமெரிக்காவில் பணிபுரியலாம் என மே 26,2015-ல் சிறப்பு சட்டம் கொண்டுவந்தது. ஒபாமா அரசின் இந்தக் கொள்கையால் அமெரிக்க தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சேவ் ஜாப்ஸ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு, நேற்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹெச்-4 விசா மூலம் வழங்கப்பட்ட பணி அனுமதி இன்னும் 3 மாதத்தில் ரத்து செய்யப்படும். இதுதொடர்பான புதிய சட்டம் 3 மாதத்திற்குள் இயற்றப்படும் என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு தாக்கல் செய்த மனுவில் ஹெச்-4 விசாவை ரத்து செய்ய நீதிமன்றம் விரும்பினால், அரசு அதை நிறைவேற்ற தயாராக இருப்பதாக கூறியது. இதன் காரணமாக அமெரிக்காவில் ஹெச்-4 விசா மூலம் பணிபுரிந்து வருவோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விசாவின் கீழ் ஒரு லட்சத்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள். ஹெச்-4 விசா ரத்து செய்யப்பட்டால் இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு தாய்நாடு திரும்ப நேரிடும்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|