குட்கா ஊழல்: குடோன் உரிமையாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 6, 2018, 14:25 [IST] சென்னை, அண்ணாநகரை சேர்ந்தவர் மாதவராவ். இவர், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை, சென்னை அருகே, செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் மறைத்து வைத்திருந்தார். இவரது வீடு, அலுவலகம், கிடங்கு உள்ளிட்ட பல இடங்களில், 2016-ல், வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர். இதில், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு, பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தொடர்பான விவரங்கள் அடங்கிய டைரி சிக்கியது. இதில் முறையாக விசாரணை நடக்கவில்லை என திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மாதவ் ராவ் டைரி அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 31-ம் தேதி குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவ்ராவை சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து செங்குன்றத்தில் உள்ள அவரது கிடங்கிற்கு, சி.பி.ஐ., அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். மாதவராவ் கூறிய தகவலின் அடிப்படையில் நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டிகே ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடு அலுவலகங்கள் உட்பட 35 இடங்களில் சோதனை நடந்தது. சோதனையை தொடர்ந்து இன்று காலை இடைத்தரகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திடீரென குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மாதவ்ராவ், உமாஷங்கர் குப்தா இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்குமார், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அளிக்கும் வாக்குமூலம் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|