லாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூலை 24, 2018, 19:50 [IST] தெற்கு லாவோஸில் அட்டபியு மாகாணத்தில் உள்ள சான் சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு நீர் மின் அணை திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு உடைந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அணை அருகே உள்ள யாய் தயே, ஹின்லேட், மய், உள்ளிட்ட ஆறு கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு லாவோஸில் தற்போது உடைந்துள்ள அணை கட்டும் பணி தொடங்கியது. பணிகள் நிறைவடையும் நிலையில் இந்த ஆண்டு அணையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டிருந்தது. கடந்த சில நாட்களாக லாவோஸில் கன மழை பெய்து வந்த நிலையில், அணை உடைந்து வேகமாக வெள்ள நீர் வெளியேறியதால் வெள்ளத்தில் சிக்கி சுற்றுவட்டார கிராமங்களில் வசித்த பொதுமக்களில் நூற்றுக் கணக்கானோர் மாயமாகியுள்ளனர். 6,600-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். லவோஸ் ராணுவமும், மீட்பு படையினரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். லாவோஸ் நாட்டு பிரதமர் தொங்லவுன், அணை உடைந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து நிவாரணங்களை வழங்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளார். கம்யூனிச நாடான லாவோஸ் ஆசியாவின் மிகவும் ஏழை நாடாகும். அண்டை நாடுகளுக்கு நீர் மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை விற்பனை செய்து வருகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|