எஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 01, 2018, 16:00 [IST] நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தைத் தட்டினார். பெண் பத்திரிகையாளர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அந்தச் சம்பவத்துக்கு ஆளுநர் மன்னிப்புக் கேட்டார். இதையடுத்து பாஜக கட்சியைச் சார்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பெண் செய்தியாளர்களைக் கொச்சைப்படுத்தும் பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதற்கு செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் கண்டனங்கள் எழுந்தன. எஸ்.வி.சேகருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் எஸ்.வி.சேகர் மீது காவல்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டது. எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வந்தார். இதற்கிடையே ஜாமீன் கேட்டு எஸ்.வி.சேகர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய இன்று (01-06-2018) வரை தடை விதித்திருந்தனர். ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. அவரை கைது செய்ய தடையில்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. விசாரணை நீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகவும் எஸ்.வி.சேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|