தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 22, 2018, 12:50 [IST] தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். இன்று 144 தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மடத்தூரிலிருந்து பேரணியாக புறப்பட்டு சற்று தொலைவில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அங்கு, ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த ஏராளமான போலீஸார் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். மற்றொரு போராட்டக் குழுவினர் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குண்டு பாய்ந்து ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். இதையடுத்து ஆவேசமான போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். மேலும் ஆட்சியர் அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தீ வைக்கப்பட்டது. குறைவான எண்ணிக்கையிலே காவல்துறையினர் இருந்ததும், போராட்டக்காரர்களின் மன எழுச்சி அதிகமாக இருந்ததும், போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியதும், கண்ணீர் புகை குண்டு வீசியதும் கலவரத்துக்கு முக்கிய காரணமாகியது. ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் பாதுகாப்பாக அருகில் இருந்த காவல்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|