நீட் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 06, 2018, 22:40 [IST] மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 1, 07, 480 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இவர்களில் 5,800 மாணவர்களுக்கு எர்ணாகுளம், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்ததால், மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு எழுதிய மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை எர்ணாகுளத்தில், அவர்கள் தங்கியிருந்த விடுதியில் மாரடைப்பால் மரணமடைந்தது, தமிழகத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மற்றொரு மாணவியின் தந்தையும் மாரடைப்பால் இன்று மாலை மரணமடைந்தது தமிழகத்தில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை பசுமலையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு அவரது தந்தை கண்ணன் சிவகங்கை சிங்கம்புணரியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நீட் தேர்வு எழுதுவதற்கு தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர் இருவர் ஒரே நாளில் மாரடைப்பால் அடுத்தடுத்து மரணமடைதிருப்பது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தமிழக மக்களின் பெருத்த எதிர்ப்பிக்கிடையே நீட் தேர்வை வலுக்கட்டாயமாக திணிக்கும் மத்திய அரசு மீதும், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்காமல் மெத்தனமாக இருக்கும் மாநில அரசு மீதும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இச்சூழ்நிலையில் நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளச்சலால் ஏற்பட்டுள்ள இந்த மரணங்கள் பொதுமக்கள் மனத்தில் இவ்விரு அரசுகள் மீதும் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|