குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 27, 2018, 08:55 [IST] தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு அனுமதித்ததாகவும், இதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை புறநகரில் உள்ள எம்.டி.எம். என்ற பான்மசாலா நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.250 கோடி அளவுக்கு அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டைரி மூலமாக, தடை செய்யப்பட்ட குட்காவை தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு கோடிக்கணக் கான பணம் லஞ்சம் கொடுக் கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு தொடங்கியதிலிருந்து இதற்கு சி.பி.ஐ விசாரணை தேவையில்லை எனத் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் கடந்த ஜனவரி 30-ந்தேதி தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டனர். நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். அப்போது, குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அவர்கள் அதிரடி உத்தரவிட்டனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|