சென்னை சூளைமேட்டில் நகைக்காக இளம்பெண் கொலை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 18, 2018, 20:25 [IST] சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில் வசித்தவர் வேல்விழி(19). நர்சிங் டிப்ளமோ படித்து வந்தார். இவரது சொந்த ஊர் விருத்தாச்சலம். கடந்த 6-ம் தேதி தனது தந்தையுடன் கடைசியாக பேசிய வேல்விழி பின்னர் பேசவில்லை. அவரது தந்தை பேச முயன்ற போதும் வேல்விழியின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை வந்த வேல்விழியின் தந்தை, வேல்விழி தங்கி இருந்த இடத்தில், அவர் வேலை செய்த இடத்தில் விசாரித்துப் பார்த்ததில் எதுவும் தெரியவில்லை. எனவே வேல்விழியின் தந்தை ராஜேந்திரன் சூளைமேடு காவல்நிலையத்தில் கடந்த 9-ம் தேதி புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வேல்விழி வசித்த குடியிருப்பு, பணியாற்றிய மருத்துவமனையில் விசாரித்தனர். அப்போது வேல்விழியுடன் நர்சாக பணியாற்றும் மகாலட்சுமி என்பவரின் கணவர் அஜித்குமார் என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அஜித்குமாரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் மறுத்த அவர் இறுதியில் வேல்விழியை கொன்றது நான் தான் என ஒப்புக்கொண்டார். விசாரணையில் அஜித்குமார், வேல்விழியை கொன்று அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி ஒரு வாடகை ஆட்டோ பிடித்து கோயம்பேடு கொண்டுச்சென்றதாகவும், அங்கு மின்சார கேபிள்களை சுற்றும் பெரிய உருளை இடையில் உள்ள இடைவெளியில் திணித்துவிட்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அஜித்குமாரை அந்த இடத்துக்கு அழைத்துச் சென்று, சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த வேல்விழியின் உடலை மீட்டனர். அஜித்குமாரின் மனைவியும் அஜித் குமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அஜித்குமார் பாலக்காட்டை சேர்ந்தவர். மூன்று மாதத்திற்கு முன் சென்னைக்கு வந்துள்ளனர். அஜித்குமாரின் மனைவி மகாலட்சுமியும் வேல்விழியும் விருகம்பாக்கத்தில் நர்சாக பணியாற்றுகிறார். நர்சிங்ஹோம் அனைவருக்கும் சூளைமேட்டில் ஒரே குடியிருப்பில் இடம் பிடித்து தங்க வைத்துள்ளது. அஜித்குமார் வேலைக்கு போகாமல் மனைவியை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமிக்கு பிறந்த நாள் வர தனக்கு பரிசு வேண்டும் என கணவரிடம் கேட்டுள்ளார். தனது நண்பர்களிடம் கடன் கேட்டுள்ளார். யாரும் தராததால், ரூமில் தனியாக இருந்த வேல்விழியிடம் கடன் கேட்டுள்லார். அவர் இல்லை என்று தெரிவித்ததும், நகை அல்லது செல்போனை கடனாக தருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் வேல்விழி எதுவும் தர மறுத்து அஜித்தை திட்டி அனுப்பியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் துப்பட்டாவால் வேல்விழியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை பிளாஸ்டிக் சாக்கு பையில் கட்டி ஆட்டோ ஒன்றை பிடித்து கோயம்பேட்டிற்கு சரக்கு கொண்டு போவது போல் கொண்டு சென்று, போட்டுவிட்டு வந்துள்ளார். பின்னர் வேல்விழியிடம் இருந்து எடுத்த நகையை அரும்பாக்கத்தில் உள்ள நகைக்கடையில் விற்று மனைவியின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்கிக் கொடுத்து கொண்டாடியுள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|