காவிரிக்காக தீக்குளித்த வைகோ உறவினர் சரவணசுரேஷ் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 14, 2018, 16:25 [IST] விருதுநகர் ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்து வந்தவர் சரவணசுரேஷ் (வயது 50). இவரது மனைவி அமுதா விருதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வைகோ பங்கு வாங்கிவிட்டதாக குறிப்பிட்டு போடப்பட்ட மீம்ஸ் குறித்து சரவணன் சுரேஷ், வைகோவிடம் வருந்தியுள்ளார். இந்நிலையில் நேற்று (13-04-2018) காலையில் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்ற அவர் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் தமிழ்நாடு ஓட்டல் அருகே சென்ற போது, காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கினார். பின்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து தன் உடல் மீது ஊற்றி “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும்“ என்று கோஷமிட்டபடியே உடலில் தீ வைத்துக்கொண்டார். இதைப்பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சரவண சுரேசுக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு உடனடியாக வந்த வைகோ, சரவண சுரேஷின் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். இந்நிலையில், இன்று சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். மாலை 6 மணிக்கு மேல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியில் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது. தீக்குளித்த சரவணசுரேஷ், வைகோவின் மனைவி ரேணுகாதேவியின் சகோதரர் ராமானுஜத்தின் மகன் ஆவார். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி. விருதுநகரில் வசித்து வந்தார். இவருடைய மகன் ஜெயசூர்யா மதுரையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மகள் ஜெயரேணுகா விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|