#GoBackModi : உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டானது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 12, 2018, 15:15 [IST] காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும், கர்நாடகாவிற்கு ஆதரவாகவும், தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் வஞ்சிக்கும் பாஜக பிரதமர் மோடியை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும், சமூக அமைப்புகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். 10ம் தேதி சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் நடந்த போராட்டம் காரணமாக சென்னையில் நடப்பதாக இருந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னை அடுத்துள்ள திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சி தொடக்க விழா மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பாஜக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். மோடியின் வருகையின்போது கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கூறியிருந்தன. அதன்படி சென்னையில் காலை முதலே பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஜிஎஸ்டி சாலை, விமான நிலையம் அருகே உள்ள இடங்களில் கறுப்பு பலூன்களை பறக்க விட்டும் போராட்டங்கள் நடக்கின்றன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இதே போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன. மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த ஹேஷ்டேக் முதலில் இந்திய அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது. மதியம் 12 மணிக்கு பிறகு #GoBackModi ஹேஷ்டேக் உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது. ஒரு பிரதமருக்கு எதிராக இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இப்படிப்பட்ட பிரமாண்ட போராட்டம் நடப்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று தெரிகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|