சென்னை ஐபிஎல் போட்டி டிக்கெட் விற்பனை நிறுத்தம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 11, 2018, 19:10 [IST] காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய பாஜக அரசை வலியுறுத்தி, சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று 10-04-2018 அன்று, சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக 2,000-க்கும் மேற்பட்டவர்கள் சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். போட்டியின்போது மைதானத்தினுள் செருப்பும் வீசப்பட்டது. இதனால் போட்டி நடைபெற்ற போது சென்னையில் பரபரப்பான சூழ்நிலவியது. இதையடுத்து எதிர்ப்பு காரணமாக சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் பரிசீலித்தது. எனவே வரும் 20ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை 12-04-2018 அன்று துவங்குவதாக இருந்தது. இந்த டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெற வேண்டிய மீதம் உள்ள ஆறு போட்டிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதற்காக விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், பூனா, ராஜ்கோட் ஆகிய நான்கு இடங்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் ஏதாவது ஒரே இடத்திலோ அல்லது பல இடங்களிலோ சென்னையில் நடைபெறவிருந்த 6 போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இருப்பினும் விசாகப்பட்டினத்தில் போட்டிகள் நடைபெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிக்கு மீண்டும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|