டெல்லியில் புழுதிப் புயல் : விமான சேவை பாதிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 06, 2018, 20:25 [IST] டெல்லியில் திடீரென்று வீசிய புழுதிப் புயலால் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. சாலையில் புழுதிப்படலம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். பாதசாரிகளும் புழுதிப் புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓட வேண்டிய சூழல் உருவானது. புழுதிப் புயலால் டெல்லி வெப்பநிலை 33 டிகிரியில் இருந்து 22 டிகிரியாக குறைந்தது. இந்த மாற்றம் 10 நிமிடத்தில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புழுதிப் புயலுடன் சேர்த்து மழையும் பெய்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 24 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. பெரும்பாலான சாலைகளில் புழுதிப் புயல் காரணமாக வாகனப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இதையடுத்து பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இருசக்கர வாகன ஓட்டிகள் புழுதிப் புயல் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டனர். பலர் சாலையோரங்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு பாதுகாப்பாக ஒதுங்கினர். திடீரென்று வீசும் புயலுக்கு காரணம் தெரியவில்லை. மேலும் இந்த புயல் எவ்வளவு நேரம் வீசும், என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தெரியாததால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். டெல்லியில் அதிக மாசு காரணமாக மக்கள் கடந்த சில வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவில் மாசு ஏற்பட்டு, கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு செல்கிறது. இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் டெல்லி அரசு திணறி வருவது குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|