காவிரி போராட்டம் : ஸ்டாலின், ஆதரவு கட்சித் தலைவர்கள் கைது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 05, 2018, 11:25 [IST] உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்தபடி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக காலம் தாழ்த்திய மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காமராஜர் சாலையை நோக்கிச் சென்றனர். திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் திமுகவின் ஆதரவு கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோர், காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து மெரினா நோக்கி செல்ல முற்பட்டனர். போலீசார் அவர்களை மெரினா நோக்கி செல்லாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் உழைப்பாளர் சிலை எதிரில் சாலையில் அமர்ந்து மறியிலில் ஈடுபட்டனர். இதைஅடுத்து, ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், வீரமணி, ஜவாஹிருல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும், தொண்டர்கள் பெருமளவில் குவிந்துள்ளதால், அவர்களை கலைக்க முடியாமலும், போதிய பேருந்துகள் இல்லாததால், கைது செய்வதற்கு இயலாமலும் போலீசார் திணறி வருகிறார்கள். இதனால் சென்னையின் முக்கியமான சாலைகளான அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|