காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 31, 2018, 15:45 [IST] காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு கடந்த 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஆதரவாகவும், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலும் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் வழக்கம் போல் கர்நாடகம் குறித்து மட்டுமே கவலை கொண்டுள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசு, காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை தற்போது அமைத்தால், கர்நாடகாவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு, வருகின்ற மே மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பாதிக்கப்படும் என்று ஒருதலைப்பட்சமாக தெரிவித்துள்ளது. இந்த மனுவில் எள்ளளவும் கூட தமிழக நலன் குறித்து மத்திய அரசு கவலை கொண்டதாகத் தெரியவில்லை. மேலும் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில், காவிரி மேலாண்மை வாரியக் குழுவில் தொழில் நுட்ப வல்லுநர் மட்டும் இல்லாமல், நிர்வாக அதிகாரிகளையும் நியமிக்கலாமா என்றும் உச்சநீதிமன்றத்திடம் பாஜக தலைமையிலான மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாஜக தலைமையிலான மத்திய அரசு 6 வாரம் தூங்கிவிட்டு இப்போது உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் ‘கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 'Scheme' என்ற வார்த்தையால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, ‘ஸ்கீம்’ என்றால் என்ன அது மேலாண்மை வாரியத்தைதான் குறிக்கிறதா’ என கேள்வி எழுப்பியுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|