காவிரி விவகாரம்: ஏப்ரல் 2-ல் அ.தி.மு.க. உண்ணாவிரதம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 30, 2018, 15:15 [IST] காவிரி பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் அதிமுகவோ மதுரையில் விழா கொண்டாடி வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜெயலலிதா பேரவை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் முக்கிய நிகழ்வாக மதுரையில் 120 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னின்று நடத்தி வைத்தனர். இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ், “காவிரி வேளாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் வரும் ஏப்ரல் 2ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அ.தி.மு.க சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அறப்போராக, சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாமல் அமைதியாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார். விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, “ஏப்ரல் 2ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வை உண்ணாவிரத போராட்டத்தில் வெளிப்படுத்துவோம்” என்றார். காவிரி விவகாரத்தில் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலை உள்ள நிலையில், அதற்கு ஏற்ப மத்திய அரசுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை எதையும் மாநில அதிமுக அரசு எடுக்காததை மக்கள் வெறுப்புடன் பார்க்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மத்திய அரசுக்கு நெருக்கடி எதையும் அளிக்காத வகையில் மாநில அதிமுக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உண்ணாவிரதம் என்று உப்பு சப்பில்லாமல் அறிவிப்புகளை வெளியிடுவது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனைச் செய்வதற்கு இவர்களுக்கு எதற்கு இத்தனை எம்பிக்கள் என்று பொதுமக்கள் கேட்கின்றனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|