ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் ஏவல் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 17:40 [IST] ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 4.56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் மூலம் ஜிசாட்- 6ஏ என்னும் புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ). தகவல்தொடர்பு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தை அறிவதற்காகவும் ஜிசாட்- 6ஏ என்னும் புதிய செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜிசாட்- 6ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையத்தில் ‘எஸ்.பேண்ட்’ தகவல்தொடர்பு வசதிக்காக 6 மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய ‘ஆன்டெனா’ ஒன்றும் தயாரிக்கப்பட்டு செயற்கைகோளில் பொருத்தப்பட்டு உள்ளது. இஸ்ரோ தயாரித்த ‘ஆன்டெனா’க்களிலேயே இது மிகவும் பெரியதாகும். 3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்8 ராக்கெட்டில் முதல் நிலையில் திடஎரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் 49.1 மீட்டர் உயரமும், 415.6 டன் எடையும் கொண்டது ஆகும். இதில் 2,140 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 6ஏ செயற்கைகோள் அனுப்பப் பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|