காவிரி விவகாரம்: டெல்லியில் தமிழக விவசாயிகள் கைது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 15:35 [IST] உச்ச நீதிமன்ற மன்றம் தனது தீர்ப்பில் 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தும், இதுவரை மத்திய அரசு கர்நாடக அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. வேண்டுமென்றே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் திட்டமிட்டு காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்தில் ஆட்சியிலுள்ள அதிமுக அரசும் உறுதியான முடிவு எதுவும் எடுக்காமல் மத்திய அரசு மேல் பழி போட்டு காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளுக்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையிலும், 50 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள அதிமுக, அவர்களுடன் இணைந்தோ அல்லது தனியாக தாமும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரவோ இல்லை. அதை விடுத்து ஆளும் அதிமுக அரசுக்கு மறைமுகமாக உதவிடும் நோக்கில் நாடாளுமன்றத்தை முடக்குவது போல் நாடகமாடி வருகிறது. இதன் மூலம் மத்திய அரசை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து காப்பாற்றி வருகிறதே ஒழிய, காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கு இதனால் ஒரு பயனும் இல்லை. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தில்லியில் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர் பி.ஆர். பாண்டியன் தலைமையிலான தமிழக விவசாயிகள். இன்று மதியம் 3 மணி வரை மத்திய அரசு எந்த வித முடிவும் எடுக்காத நிலையில் பிரதமர் மோடி வீட்டின் முன்போராட்டம் நடத்தச் சென்ற பி.ஆர். பாண்டியன் தலைமையிலான தமிழக விவசாயிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலுள்ளவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததை பார்த்து பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். பல இடங்களில் மக்கள் சாலை மறியலிலும், செல்போன் டவர் மீது ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|