கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கில் லாலுவுக்கு 7 ஆண்டு சிறை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 24, 2018, 14:35 [IST] ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் கடந்த 1990 ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த போது கால்நடைகளுக்குத் தீவனம் வாங்கியதில் பெரும் அளவில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து லாலு பிரசாத் உள்ளிட்டோர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவற்றுள் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தும்கா கருவூலத்தில் இருந்து, 3.13 கோடி ரூபாய் ஊழல் புரிந்ததாக தொடரப்பட்ட 4வது ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 19ம் தேதி திங்கட்கிழமை ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பளித்தார். லாலுவுடன் ஊழலில் உடந்தையாக இருந்த மேலும் 17 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் இன்று (24-03-2018) லாலுவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 30 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். கால்நடைத் தீவன ஊழலின் முதலாவது வழக்கில், சைபாசா நகர கருவூலத்தில் இருந்து ரூ. 37.7 கோடி ஊழல் புரிந்ததாகக் கூறி, 2013 செப்டம்பர் 30ம் தேதி லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை அடுத்து லாலு எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. தேவ்கர் அரசுக் கருவூலத்தில் இருந்து ரூ.80.27 லட்சம் ஊழல் புரிந்ததாக தொடரப்பட்ட இரண்டாவது வழக்கில் லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி தீர்ப்பளித்தது. சைபாஸா அரசுக் கருவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடி ஊழல் புரிந்ததாக தொடரப்பட்ட மூன்றாவது வழக்கில் லாலுவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி தீர்ப்பளித்தது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|