36,000 கோயில் கடைகளை அகற்றுக: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 22, 2018, 16:55 [IST] பழனி அடிவாரத்தில் மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கடைகளை 15 நாட்களில் காலி செய்ய, கோயில் இணை ஆணையர் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, என்.தனசேகரன் உட்பட 7 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், “எங்கள் கடைகள் கோயில் அடிவாரத்தில் உள்ளன. அடிவாரத்தில் இருந்து 700 படிகளைக் கடந்து பக்தர்கள் கோயிலுக்குச் செல்கின்றனர். இதனால் கடைகளால் கோயிலுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. கடைகளை காலி செய்ய உத்தரவிடுவதற்கு முன்பு வியாபாரிகளிடம் கருத்து கேட்கவில்லை” எனக் கூறியிருந்தனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (22-03-2018) இந்த மனுவை விசாரித்த நீதியரசர் எஸ்.எம்.சுப்பிரமணியம் ''கோயில் வளாகத்தை மாசு இல்லாமல் பார்த்துக்கொள்வதும், சுத்தமாக பராமரிப்பதும், கோயிலில் எவ்வித இடையூறும் இல்லாமல் பக்தர்கள் அமைதியாக இறைவனை வழிபடுவதற்கு தேவையான அமைதியான சூழலை உருவாக்குவதும் அரசு மற்றும் அதிகாரிகளின் கடமையாகும். கோயில் வளாக கடைகள் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதுடன் கோயிலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. கடைகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரிகள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” “தமிழகத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமாக 36 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் அனைத்தையும் பராமரிக்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கோயில் வளாகங்களில் சட்டவிரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கோயில் வளாகங்களில் அனைத்து கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து கோயில்களின் பொறுப்பு அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை செயலர் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் 8 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|