தினசரி தியானம்

புலன் நீட்டுதல்

     என் அருள் தந்தையே, இந்திரியங்களை நான் ஒடுக்க வேண்டியதில்லை. நின் சேவையில் நான் அவைகளை வேண்டியவாறு நீட்டலாம். உன்னை அறிதற்குப் பண்பட்ட பொறிகளும் நல்ல வாயில்களேயாம்.

     விஷயங்களில் செல்லுகின்ற இந்திரியங்கள் கெட்டுப் போய்விடுகின்றன. விஷய்ங்களில் செல்லுகிற பொறிவாயில் ஐந்தையும் அவித்தம் வேண்டும். பின்பு கடவுள்பால் திருப்பப்படுமளவு அவைகள் திட்பம் பெறுகின்றன. காண்பதெல்லாம் அவன் காட்சி. கேட்பதெல்லாம் அவனைப் பற்றிய சொல். உண்பது அவன் பிரசாதம். நுகர்வதெல்லாம் அவன் வடிவம்.

பார்த்த இடமெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு
வார்த்தைசொல்ல வந்த மனுவே பராபரமே.

-தாயுமானவர்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.