இராம நவமி ![]() இராம நவமி விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் இராமனின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகையாகும். சித்திரை மாதத்தில் சுக்ல பட்சம் அல்லது வளர்பிறை ஒன்பதாம் நாள் வரும் நவமியில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அயோத்தி மற்றும் இந்தியா முழுவதும் உள்ள இராமன் கோவில்களில் முக்கியமான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அயோத்தியில், பலர் புனித ஆறான சரயுவில் நீராடிவிட்டு இராமன் கோயிலுக்குச் செல்கின்றனர். இராமாயணத்தில் இராமனின் வாழ்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் முக்கிய கொண்டாட்டங்கள் கடைப்பிடிக்கின்றன. அயோத்தி (உத்தர பிரதேசம்), இராமேசுவரம் (தமிழ்நாடு), பத்ராச்சலம் (தெலங்காணா) மற்றும் சீதாமர்ஹி (பீகார்) ஆகியவை இதில் அடங்கும். தீமையின் மீதான நன்மையின் வெற்றியையும், அதர்மத்தை வெல்லும் தருமத்தை நிலைநாட்டுவதையும் ராமநவமி குறிக்கிறது. இராமன் சூரிய குல வழித்தோன்றல் என்பதால் அதிகாலையில் சூரியனை வணக்குவதன் மூலம் இராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். ராம நவமி அன்று விரதம் இருந்து ராம நாமம் உச்சரித்தால் ராமரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ராமாயண கதை, ராமரின் கதைகளை படிப்பதும், கேட்பதும் நன்மை அளிக்கும். 108, 1008 என்ற கணக்கில் ஸ்ரீ ராம ஜெயம் எழுத வேண்டும். ஸ்ரீ ராம நாமத்தை இடை விடாது ஜெபித்து கொண்டே இருக்க வேண்டும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். ஸ்ரீஇராமநவமி அன்றைய ஒரு தினம் மட்டும் விரதமிருந்து பூஜை செய்வது பெரும்பாலானோர் வழக்கம். ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தினையோ அல்லது விக்கிரகங்களையோ அலங்கரித்து அர்ச்சிக்கலாம். அல்லது ஸ்ரீராமாயணம் புத்தகத்தினை வைத்தும் பூஜிக்கலாம். மனைப்பலகையில் கோலமிட்டு ஸ்ரீ ராமஜெயம் என்று அரிசிமாவினால் எழுதி, அதற்கு சந்தன குங்கமத் திலகமிட்டு, பூக்கள் தூவி வழிபடுவது வழக்கம். ராமநாமத்தினைச் சொல்லி தாமரை மலர்களால் பூஜிப்பது அதிக விசேஷம். எளிமையான துளசிதளங்களைக் கொண்டு அர்ச்சிப்பதும் சிறப்பு. இராமர் ஜனித்தது நடுப்பகலில் என்பதால் இப்பூஜையினை பகல்நேரத்தில் செய்வதுதான் சம்பிரதாயம். அன்னம், பாயசம், வடைபருப்பு, கனிவகைகள், தேங்காய், வெற்றிலை முதலியவற்றுடன் இயன்ற நிவேதனங்களை சமர்ப்பிப்பது வழக்கம். பானகம் மற்றும் நீர்மோர் இவற்றை பூஜை முடிந்தபின் பிரசாதமாக அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும். குடை, விசிறி அல்லது செருப்பு போன்றவைகளில் இயன்றவற்றை தானம் செய்வது விசேஷம். |