திருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்


natarajar

     திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர். ஆருத்ரா என்ற வடமொழிச்சொல் திரிந்து தமிழில் ஆதிரை ஆனது. அதோடு திரு என்ற அடைமொழியை பெற்று திருவாதிரை என்றானது.

     மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும். இது ஆருத்ரா தரிசனம் என வழங்கப்படுகிறது.

     நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவன ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. இதில் திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். மார்கழி மாத திருவாதிரை நாளில் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். அதிகாலையில் சிவாலயம் சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டும். விரதகாலத்தில், சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம், மதுரை ஆகிய பஞ்சநடராஜர் தலங்களில் எங்காவது ஓரிடத்திற்கு சென்று வரலாம்.

     மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம். திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

     தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.

சேந்தனார் வரலாறு
     சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.

     ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

     மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

     எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.

     சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுகிறது.

     திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது தேவாரத்தில் ஆதிரை நாளைப் பின்வருமாறு சிறப்பித்துள்ளார்.

"ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்"

     திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரை விழாவை திருநாவுக்கரசர் பின்வருமாறு பாடியுள்ளார்.

"முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பக்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தனாரூ ராதிரை நாளா லதுவண்ணம்"

ஆண்டுக்கு ஆறு அபிஷேகம்
     ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

பஞ்சபூத தலங்கள்
     நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்பர். இந்த ஐந்தின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது. பரம்பொருளாகிய இறைவன் ஐந்து பூதங்களிலும் கலந்து நின்று நம்மை வழிநடத்துகிறார். இந்த ஐந்துக்கும் உரிய இடங்களாக ஐந்து திருத்தலங்களை ஏற்படுத்தி வைத்துள்ளனர். அவை சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (நிலம்) ஆகும். இதில் ஆகாயத்திற்குரிய சிதம்பரமே முதன்மையாக இருக்கிறது. பஞ்சபூதத லங்களுக்குச் செல்லும்போது, சிதம்பரத்தில் தொடங்கி, காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்று யாத்திரையை நிறைவு செய்வது மரபாகும்.

நடனம்
     நடனக்கலைக்கு நாயகனாக திகழ்பவர் சிவன். அதனால், அப்பெருமானை நடேசன் என்று போற்றுகிறோம். இவர் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48. தேவியோடு சேர்ந்து ஆடியவை 36. திருமாலுடன் ஆடியது 9. முருகப்பெருமானுடன் ஆடியது 3. தேவர்களுக்காக ஆடியது 12 ஆகும். சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்திநிலையை அடைவர். இதனை ‘பார்க்க முக்தி தரும் தில்லை’ என்று கூறுவர்.

சிதம்பர ரகசியம்
     சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களில் வீற்றிருக்கிறார். இம்மூன்று விதங்களிலும் ஒருசேர அருள்பாலிக்கும் தலம் சிதம்பரம். இங்கு லிங்கரூபமாக இருக்கும் திருமூலநாதர் அருவுருவ வடிவமாவார். நடராஜரின் திருமேனி உருவ வடிவமாகும். சிதம்பர ரகசியமாக இருக்கும் வெட்டவெளி சிவனின் அருவவடிவமாகும். நடராஜரின் வலப்பக்கத்தில் ஒரு சிறுவாசல் உள்ளது. அதை திரையால் மூடி இருப்பர். பூஜையின் போது அத்திரையை அகற்றி கற்பூர ஆரத்தி காட்டுவர். அப்போது இறைவனின் திருவுருவம் எதையும் காண முடியாது. ஆகாய ரூபமாக இறைவன் இருப்பதை இவ்வழிபாடு காட்டுகிறது. இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. இறைவனும் முதலும் முடிவும் இல்லாதவன் என்பதை இது காட்டுகிறது. தங்கத்தால் செய்யப்பட்ட வில்வமாலை ஒன்றை மட்டும் அவ்விடத்தில் காணலாம். இதையே சிதம்பர ரகசியம் என்பர்.

தில்லை பாதி திருவாசகம் பாதி
     திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர், அவர் சொல்லச் சொல்ல இதை எழுதியவர் யார் தெரியுமா? தில்லையம்பல நடராஜப்பெருமானே அந்தணர் வடிவத்தில் வந்து ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுதினார். ‘மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடையான் எழுதியது என்று திருவாசக ஏட்டில் கையெழுத்திட்டு சிற்சபையின் பஞ்சாட்சரப்படியில் வைத்து விட்டு மறைந்து விட்டார். திருவாசக ஏட்டைக் கண்ட கோயில் அந்தணர்கள் மாணிக்கவாசகரை அழைத்து திருவாசகத்திற்கு விளக்கம் தருமாறு வேண்டினர். அவரும் தில்லை நடராஜரின் சன்னதிக்கு வந்துநின்று ‘அம்பலக்கூத்தனே அதன் பொருள் என்று கூறி இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அதனால் ‘தில்லை பாதி திருவாசகம் பாதிஎன்ற பழமொழி உண்டானது. திருவாசகம் வேறு, தில்லை நடராஜர் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. திருவாசகம் முழுவதும் சிதம்பரப்பெருமானின் திருவடியையே போற்றுகிறது. திருவாசகத்தில் சிவபுராணம் தொடங்கி, அச்சோ பதிகம் வரை 51 தலைப்புகளில் 658 பாடல்கள் உள்ளன. மாணிக்கவாசகருக்கு சிறப்பு செய்யும் விதத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி திருவாதிரை விழா அமைந்துள்ளது. பத்துநாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் மாணிக்கவாசகர், சுவாமி சன்னதிக்கு எழுந்தருள்வார். அப்போது திருவாசகம் பாடப்படும். குறிப்பாக திருவெம்பாவைப் பாடல்களைப் பாடுவர். அதன்பின் மாணிக்கவாசகருக்கும், சுவாமிக்கும் தீபாரதனை நடக்கும்.

மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி
     திருவாதிரை விழாவின் 9-ம் நாள் விழாவின் போது சிதம்பரத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். அப்போது மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின் போது சீர் அளிப்பது வழக்கமாக உள்ளது. அப்போதுநடராஜருக்கும், அம்பாளுக்கும் சீர்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் தொடர்ந்து தேரோட்டம் நடைபெறும். பின்னர் இரவு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.

ஆருத்ரா தரிசனம்
     திருவாதிரை நாளன்று சிதம்பரத்தில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறும். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறும். அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்வர்.

     ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோச மங்கையில் உள்ள மரகத நடராஜர், எப்போதுமே சந்தனக் காப்பில் திளைப்பார். ஆருத்ரா அபிஷேக நாளில் மட்டும் சந்தனம் களையப் பெறும். வேதாரண்யத்தில், மூலத்தானத்தில் லிங்கத்திற்குப் பின்புறம் உள்ள கல்யாணக் கோல மூர்த்திகளும், சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் சிவலிங்க மூர்த்தியும் இந்த ஒரு நாள் தவிர, வருடம் முழுதும் சந்தனக் காப்பில் திளைக்கும் மூர்த்திகள் ஆவர். இதே போன்று லால்குடி அருகே சாத்தமங்கலம் (சென்னிமங்கலம்), செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் இடையே உள்ள திருவடிச்சுரம் (திருவடிசூலம்) மற்றும் திருஈங்கோய்மலை ஆகிய இடங்களிலும் உள்ள மரகத லிங்க மூர்த்திகளுக்கான ஆருத்ரா அபிஷேக, ஆருத்ரா தரிசனங்கள் மிகவும் விசேஷமானவை.

     மேலும், திருக்காறாயில், நாகப்பட்டிணம், திருவாரூர் போன்ற ஏழு சப்தவிடத் தலங்களில் உள்ள மரகத லிங்கத் தரிசனத்தோடு ஆருத்ர வழிபாடுகளை மேற்கொள்வது விசேஷமானது. திருஆதிரை நட்சத்திரத் தலமான அதிராம்பட்டினம் ஸ்ரீஅபய வரதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா வழிபாடுகளை மேற்கொள்தல், திருஆதிரை நட்சத்திர தேவதா மூர்த்திகளின் நேரடி அனுகிரகத்தைப் பெற்றுத் தருவதாகும்.