பல்சுவை இணைய இதழ்
  திருவோணம்


     ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர்.

     மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.

     ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத்திருவிழா முடிவடைகிறது.

     சிவன் கோயில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணி யத்தை தந்தது. அடுத்த ஜென்மத்தில் எலிக்கு சக்கரவர்த்தி யோகத்தை தந்தருளினார் சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதரிக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ புண்ணிய காரியம் செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு உதாரணம் இந்த புராண நிகழ்வு.

     தற்போது ‘கேரளா’ என அழைக்கப்படும் மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) வழிநடத்தி வந்தார். தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் விஷ்ணுவிடம் கூறினார்.

     நல்லாட்சி நடத்தி வரும் மகாபலி மீது தேவர்கள் குறை கூறுகிறார்களே என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இந்த வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழுடன் இருக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார். குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். தானம் கேட்பதற்காக கொடை வள்ளலாம் மகாபலியிடம் சென்றார். விஷ்ணுதான் வாமன அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்துகொண்டார் சுக்கிராச் சாரியார். ‘வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே. அது உன் ஆட்சி, அதிகாரம் மட்டுமின்றி ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும்’ என்று மகாபலியை எச்சரித்தார்.

     மகாபலி கேட்கவில்லை. ‘நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை, மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் பாராட்டுகிறது. இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த பாக்கியம். எல்லோரும் கடவுளிடம்தான் கேட்பார்கள். அந்த கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது’ என்றார் மகாபலி. விஷ்ணுவை தரிசிக்க காத்திருந்தார். மகாபலியிடம் வந்து சேர்ந்த வாமனன் தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாக கூறினார். குள்ளமான உருவத்துடன் வந்த வாமனனை மகாபலி விழுந்து வணங்கினார். ‘மூன்றடி நிலம்தானே.. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். ‘நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடு’ என்றார் வாமனன்.

     இடையே புகுந்தார் சுக்கிராச்சாரியார். ‘மகாபலி! வந்திருப்பது விஷ்ணு. மூன்றடி நிலம்தானே என சாதாரணமாக நினைத்து தாரை வார்த்துக் கொடுத்துவிடாதே’ என்றார். அப்போதும் மகாபலி கேட்கவில்லை. தாரை வார்ப்பதற்காக கமண்டல நீரை சாய்க்கத் தொடங்கினார். குரு சுக்கிராச்சாரியாரின் மனம் கேட்கவில்லை. வண்டாக மாறி கமண்டலத்தின் துளையை அடைத்துக் கொண்டார். மகாபலி கமண்டலத்தை எவ்வளவு சாய்த்தும் தண்ணீர் வரவில்லை. சுக்கிரனின் இந்த காரியத்தை தெரிந்துகொண்டார் வாமனன். கையில் இருந்த தர்ப்பையை எடுத்து கமண்டல துளையில் குத்தினார். வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார். கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேற, அதை தன் கையில் பிடித்து மூன்றடி நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்தார் மகாபலி.

     ‘மூன்றடி நிலம் எடுத்துக் கொள்ளலாமா? என்றார் வாமனன். ‘தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் மகாபலி. குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?’ என்றார். ‘உலகையை அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு.

     கொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கவும் அருள் செய்தார். மகாவிஷ்ணுவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் மகாபலி. ‘நீங்கா புகழ் தந்தருளிய பெருமாளே. நாட்டு மக்களை என் உயிராக கருதி ஆட்சி செய்து வந்திருக்கிறேன். அவர்களை பிரிவது கஷ்டமாக இருக்கிறது. ஆண்டுதோறும் ஒருநாளில் அவர்களை நான் சந்திக்க வரம் அருள வேண்டும்’ என வேண்டினார். அவ்வாறே நடக்க அருள் செய்தார் மகாவிஷ்ணு. தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டுதோறும் ஓணப் பண்டிகையின்போது மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அதனால்தான், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.

     மக்களை பார்ப்பதற்காக ஊர் ஊராக, வீதி வீதியாக மகாபலி வருவார் என்பது நம்பிக்கை. மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

     ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுதுக் கொள்வர்.

     "புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்க்ளி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓனம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.

     ஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் "கைகொட்டுக்களி". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.

     ஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்கு சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.

     ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

     பெருமாளின் நட்சத்திரம் திருவோணம். இந்த நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டால் தடைகள், இடையூறுகள் நீங்கி சுபயோக வாழ்வு கிடைக்கும். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை தரிசித்து வணங்குவது சிறப்பாகும்.

     கேரளாவின் ஓணம் பண்டிகையைப் போன்றே ஒரு பூத்திருவிழா தாய்லாந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, வீட்டைப் பூக்களால் அலங்கரித்து பல வகையான உணவு வகைகளை சமைத்து உண்டு மகிழ்வர். பூக்களால் ஆன வண்டிகளில் ஊர்வலம் நடைபெறும்.

     ‘ஓணம் வில்’ என்பது சம்பிரதாயமான அலங்காரமிக்க வில். ஒணம் பண்டிகை நாட்களில் திருவனந்தபுரத்திலுள்ள பத்மனாப ஸ்வாமி கோயிலுக்கு இதனை பக்தர்கள் சமர்ப்பிக்கிறார்கள். பிறகு அதனை பெருமாளின் பிரசாதமாகக் கருதி வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த வில்லை வீட்டு பூஜையறையில் வைத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறந்த ஆரோக்கியத்துடனும், ஐஸ்வர்யத்துடனும் வாழலாம் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

     இன்று கேரளாவில் மட்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் இவ்வோணம் பண்டிகை பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டில் குறிப்பாக மதுரையில் நடைபெற்றுள்ள செய்தியை சங்க இலக்கியம் சுட்டுகிறது. தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையை ஆண்டபோது, அங்கு திருவோணத் திருவிழா நடைபெற்ற செய்தியை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விரிவாக விளம்புகிறார். ஆவணி மாதம் நிறைமதி நன்னாளான திருவோணத்தன்று திருமால் பிறந்ததாகவும், (மது.காஞ்சி 590), அதனை மக்கள் அனைவரும் ஒன்று கூடி விழாக் கொண்டாடியதாகவும் குறிப்பிடுகிறார். அன்று காய்கறி, கனி முதலிய உணவுப் பெருட்களை விருந்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்திருந்தனர். வீரர்கள் சேரிப்போர், என்னும் வீர விளையாட்டை நிகழ்த்தினர் என்றும், வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பசுகளைப் பாண்டிய மன்னன் வழங்கினான் என்றும், மதுரையில் நடைபெற்ற ஓணம் பண்டிகையை விளக்குகிறார் மாங்குடி மருதனார். அதன் பிறகு எழுந்த இறையனார் களவியல் உரைகாரர் நக்கீரர், தமிழ்நாட்டில் நடைபெற்ற திருவிழாக்களைக் கூறுமிடத்து "மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப் பங்குனி உத்திரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்" என்று குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் மதுரை ஆவணி அவிட்டம், திருவோணத் திருவிழாவையே குறிக்கும். மேலும் ஆவணி மாதத்தே திருவோண நட்சத்திரத்தில் வரவேண்டிய பௌர்ணமி அடுத்த அவிட்ட நாளிலும் வரக்கூடியது என்பதும் இவ்விரண்டு நட்சத்திரங்களும் சடங்கு, விழா முதலியன நடப்பதற்கு உரியவையாம்; அந்தணர் புதுப்பூனல் தரித்துப் புரியும் சிவாரணச் சடங்கு ஓணத்தை அடுத்த அவிட்ட நாளிலும் நடைபெறுவதால் பாண்டிய நாட்டெழுந்த களவியல் நக்கீரர் சுட்டும் ஆவணி அவிட்டம் திருவோணத்தையே குறிப்பதாகச் சுட்டுகிறார்.

     தமிழ்நாட்டில் நடைபெற்ற ஓணம் பண்டிகையைப் பெரியாழ்வாரும் திருஞான சம்பந்தரும் குறிப்பிடுகிறார்கள். திருமாலுக்கு உய நாள் திருவோணம் என்ற போதிலும், சென்னை - மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் திருவோண விழா நடைபெற்ற செய்தியை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார்.
மாயான் : ஹூலியோ கொர்த்தஸார்
ஆசிரியர்: எஸ். வாசுதேவன்
வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு
விலை: ரூ. 200.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

என்னருகே நீயிருந்தால்
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy

எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இடர் களையாய்...
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)