http://www.agalvilakku.com
இணைய இதழ்
மாதம் இரு முறை


ஆன்மிகம்

அறுபத்து மூவர் கவிதை வடிவம்

கவிஞர் சிவ.முத்துராமலிங்கம்


     பெரியபுராணம் என்ற ஓர் காவியப் பெருநூல் சைவத் திருமுறைகளில் 12வது இடத்தைப் பெறுவதாகும். இந்நூல் சேக்கிழார் பெருமானால் செய்யப்பட்ட அடியார் பெருமைகளைப் பேசும் ஓர் மிகச் சிறந்த படைப்பு. 12ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி செய்த சோழப் பேரரசன் அநபாயன் அரசின் முதலமைச்சராக விளங்கிய சேக்கிழாரின் அரிய முயற்சியே அழகிய இந்த நூல்.

     முதலாவதாக சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவன் ‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன்’ என்று அடியெடுத்துக் கொடுத்து, திருத்தொண்டத் தொகை உருவானது. அஃதெனவே ‘உலகெலாம்’ என்ற ஒரு சொல்லை இறைவன் உவந்து அருள, அடியார் புராணமாகிய, தொண்டர் புராணம் ஆகிய பெரிய புராணம் உருவாகியது.

     இத்துணை பெருமை கொண்ட பெரிய புராணம் பன்னெடுங் காலமாக ஓர் பூசைப் பொருளாகவே பன்னிரு திருமுறைகளோடு வணங்கப்பட்டு வந்தது. கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட ஓர் விழிப்புணர்வில் இது மக்களிடையே உலவி, ஓர் பண்பாட்டு மறுமலர்ச்சியைத் தர, சைவத் தமிழறிஞர்கள் முயன்று வருகிறார்கள். இந்த முயற்சியின் பலனாக உலகம் இந்தப் பெரியபுராணத்தை அறிய முற்படுகிறது.

     இந்தப் பெருமுயற்சியில் அடியனது அணிற் பங்காக, பெரிய புராணத்தை எளிய கவிதை வடிவமாக ஆக்கி அனைத்துச் சாராரும் சுவைபடப் படித்து அறியும் பாங்கில் அமைத்துள்ளேன். எளிய உரை நடையும் ஒவ்வொரு நாயன்மாருக்கும் தனித்தனியே இணைத்துள்ளேன்.

     இதே நடையில் ஏற்கெனவே, திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர், அறுபத்துமூவர் அறிமுகம் ஆகிய கவிதை நூல்கள் வெளிவந்து மக்களிடையே உலவி வருகின்றது சற்று மகிழைத் தரும் செய்தியாக அமைகிறது. எனவே எனது முழுமையான அறுபத்து மூவரது கவிதை வடிவத்தையும் தங்களிடையே தொடர்ச்சியாக அர்ப்பணிக்க, எல்லாம் வல்ல இறைத்திருவுளம் அருளப் பிரார்த்திக்கிறேன்.

     என் கடன் பணி செய்து கிடப்பதே என்றவாறு அகல் விளக்கு ஒளி தர முனைகிறது. தொடரும் அதன் ஒளி குன்றின் மேல் இட்ட ஒளியாக விளங்க அடியேனின் வாழ்த்துக்கள்.

திருச்சிற்றம்பலம்.

*****

1. தில்லை வாழ் அந்தணர்கள் (தொகை அடியர்)

     முதல் நாயன்மாராக அறிவிக்கப்பட்ட தில்லை வாழ் அந்தணர்கள், தனிப்பட்ட எவரையும் குறிக்காது. நடராஜப் பெருமானை சேவிக்கின்ற அடியார்கள் அத்துணை பேரையும் சேர்த்து, இவ்வாறு கூறினார்.

     தில்லைச் சிதம்பரம் இறைவனுக்கு இருதயத்தானம். இங்கு சிவஞானப் பரவெளியில் இறைவன் தொடர்ந்து ஆனந்தத் திருநடனம் புரிகிறார். தூக்கிய குஞ்சிதபாதத்தை வணங்குவோர் வினைகள் துகளாகும்.

     அம்பலத்தானை முப்போதும், எப்போதும் வழிபடும் திருவுடையோர் தில்லை வாழ்வோர். திருநீறு புனைந்து அகமும் புறமும் தூய்மை நிறைந்தவர்கள். மாசிலா மரபு வந்து, முத்தீ வளர்த்து தவமென வாழ்பவர்கள். குற்றமற்ற ஒழுக்க நெறி நின்று, ஆறு அங்கங்களையும் அறிந்து ஓதுபவர்கள். சரியை கிரியை ஞானம் யோகம் என்ற நான்கு வழிகளிலும், நின்று தானம் செய்து குற்றமறக் குணம் காப்பவர்கள். மறையறம் போற்றும் மாண்புடையவர்கள். எம்பிரானை வழிபடும் சுகத்தை இம்மையில் பெற்ற இவர்களே போற்றுதற்கு உரியவர்கள். இறைவனே அடியெடுத்துத் தந்து பாடுமாறு சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அருளுகிறார் என்றால், தில்லை வாழ் அந்தணர்களின் பெருமை சாற்றுதற்கு மிக அரிதாம்.

திருச்சிற்றம்பலம்.

*****

தில்லை வாழ் அந்தணர்

அளவிலா சோதியாகி, ஆனந்தக்கூத்து உகந்தாடி,
உளமுள, ஓர் இணைப் பூங்கழல் தலைகொண்டு,
நிலமுள மட்டுமின்றி, என்றும் நில் சீருடைச்சிதம்பரத்து
வளமுற்ற தில்லைவாழ் அந்தணர், பெருமை சாற்றுவோம்! 1

நீறணி கோலமொடு நித்தமும் நிமலனை அருகுறு
பேறினை, நெஞ்சில் கொண்டு அடித்தொண்டு அன்பொடு,
புரியும் வரம்பில் பெரிய பூசனை சார் பணியன்றி
புரிபணி வேறொன்றறியா, பேதமில் வேதியர் இவரே! 2

யுகமுறத் தொண்டுசெய்து, தில்லையன், திகழநல்ல,
அகம்படித் தொண்டைஎன்றும் அழகில் செய்வார்!
வேதம் நான்கெனும், ரிக், யசூர், சாம, அதர்வணம் ஆக,
ஆறங்க சிட்சைமுதல் சோதிடம் கற்பம்வரை. 3

மாசறுமீமாஞ்சை, நியாயம், புராணம், மிகுதியெனும் நான்கும்,
கசடறக்கற்று, ஆகவணியம், காருகபத்தியம் தக்கணாக்கினி என,
வசமுறும்மூத்தீ வளர்த்து, தீதில் அந்தணர் திருக்குலம்வந்து
நிசமேபேச, நன்னெறிசார்ந்து, உலகியல் அழுத்தும், நோய்பசி 4

தீர்த்து, தம் இறைக்கடனே சிந்தையில் கொண்டு
திருநீறு ஒன்றே, பிறவிஅடை செல்வம்என்று,
ஒருமையுடன் உலகு வாழ்ந்து, மன்று நடம் புரிவானின்
உருவத்தை, உளம் நிறைத்து, உற்றவர்க்கே, நல்ல 5

தானம்செய்து, தவமாய் இல்லறத்தை இனிக்கச் செய்து,
வானத்தன்மை கொண்ட, செம்மனம் உடையோராகி,
தான் ஒன்றாய் கொண்ட மூவாயிரம் பேரெனவே,
காணநிகராகத் தானேஆகும் இவர்பெருமை இயம்புதல்ஆமோ! 6

திருத்தொண்டத் தொகைதொடங்க, அடிதந்த தியாகேசன்,
உறுநல்ல தில்லைவாழ் அந்தணர் எனஒலிக்க,
வரும்நல்ல தொகைநிறைப்பார் ஆருரன்! அது சிறப்பாம்,
அரும்முதலாய், அந்தணர் தில்லையர் வாழ்க! வாழ்க! 7

திருச்சிற்றம்பலம்.

கவிஞர் சிவ.முத்துராமலிங்கம்
18, சிவன் கோவில் தெரு,
பாடி, சென்னை - 600 050
பேசி: +91-91714-95310